திருப்பூர்: தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், 'மேற்கு தமிழகம் கூட்டமைப்பு' திருப்பூரில் துவங்கப்பட்டது.
கொங்கு மண்டலத்தை சார்ந்த தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாவட்டம், கொடுவாயில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தனி மாநிலக் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். 'கொங்கு நாடு' என அழைக்கப்படும், 10 மாவட்டங்களையும், இன்னும் சில மாவட்டங்களையும் இணைத்து, 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடவும், மக்களை ஒருங்கிணைக்கவும், 'மேற்கு தமிழகம் கூட்டமைப்பு' என்ற பொது அமைப்பு துவங்கப்பட்டது.

'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொங்கலுார் மணிகண்டன் பேசியதாவது: கொங்கு மண்டலம் 50 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படுகிறது. பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணி உள்ளிட்ட வரி வருவாயை அளித்த போதும், அதற்கு ஏற்ற உட்கட்டமைப்பு, பெரிய அளவிலான வளர்ச்சி எதையும் பெறவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய தலைவர்களும் நீண்ட காலமாக, கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்க வலியுறுத்தினர். மாநாடு, பேரணிகள் என முயற்சிகள் எடுத்தபோதும், விழிப்புணர்வு அடையாத நிலையில், மக்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு, 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட கொங்குநாடு குறித்த செய்தியின் எதிரொலியாக தனி மாநிலம் வேண்டும் என்ற எண்ணம், கிராமங்கள் வரை பரவி விட்டது. இதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம் முழுதும், அனைத்து எம்.பி., - எம்.எல்.ஏ., - உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் என அனைவரையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். நவம்பர் மாதம், மத்திய உள்துறை அமைச்சரை டில்லியில் சந்தித்து, மேற்கு தமிழகத்தை தனி மாநிலமாக்கும் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.
'கெடுபிடி'யால் 'ரகசிய' கூட்டம்
தனி மாநிலம் கோரிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம், நேற்று மதியம் நடக்க இருப்பதை அறிந்து, ஆளும்கட்சி, போலீசார் என பல்வேறு தரப்பில் இருந்து, இதை நடத்த விடாமல் தடுக்க, சில நாட்களாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. கூட்டம் நடத்த திருமண மண்டபங்களை வழங்க உரிமையாளர்கள் முன்வரவில்லை. இறுதியாக, கூட்டம் ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, போலீசாரின் கெடுபிடியும் இருந்த காரணத்தால், பெரிய அளவில் கூட்டத்தை சேர்க்காமல் மதியம் நடக்க இருந்த கூட்டத்தை, முன்னதாக ரகசியமாக நடத்தி முடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE