புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு மருத்துவ சிகிச்சை அளித்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் கோட்டாவை சேர்ந்தவர் பிரமிளா சிங். ஓய்வு பெற்ற ராணுவ மேஜரான இவர் கொரோனா பரவல் துவங்கியது முதல் ஒன்றரை ஆண்டுகளாக ஆதவற்ற தெருக்களில் சுற்றி வரும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷியாம்வீர் சிங்கும் உதவியாக இருக்கிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி பிரமிளா சிங்கை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா ஊரடங்கால் தெருவில் சுற்றிய விலங்குகள் உணவு கிடைக்காமல் தவிப்பதை அறிந்து அவற்றுக்கு உதவிய உங்களின் நடவடிக்கை சமுதாயத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

கொரோனா காலம் மனிதர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடன் நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கும் கடினமானதாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில் ஆதரவற்ற விலங்குகளின் தேவைகளை உணர்ந்து அவற்றுக்காக தனிப்பட்ட முறையில் பணியாற்றியது பாராட்டுக்கு உரியது.முன்னாள் மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும் தங்கள் பணிகளை தொடர்வர் என்பதுடன் தங்கள் பணிகளால் மேலும் பலரையும் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட ஊக்குவிப்பர் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.