புதுடில்லி: 'இந்தியாவில் 2014 முதல் 2019ம் ஆண்டுவரை 326 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தேசத்துரோக வழக்கு தொடர்பான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
இந்தியாவில் 2014 முதல் 2019ம் ஆண்டுவரை 326 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 54 வழக்குகள் அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 141 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக அசாமில் 54 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 93 தேசத்துரோக வழக்குகள் பதிவாகின.
2018ல் 70 வழக்குகளும், 2017ல் 51 வழக்குகளும், 2016ல் 35 வழக்குகளும்,
2015ல் 30 வழக்குகளும் பதிவாகின. 2019ம் ஆண்டில் அதிகபட்சமாக 44
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2018ல் 38
வழக்குகளிலும், 2017ல் 27 வழக்குகளிலும், 2016ல் 16 வழக்குகளிலும், 2014ல்
14 வழக்குகளிலும், 2015ல் 6 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது.
2018ம் ஆண்டில் 2 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். 2019, 2017, 2016, 2014 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருவர் குற்றவாளி என தேசத்துரோக வழக்கில் அறிவிக்கப்பட்டனர். 2015ம் ஆண்டில் யாரும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE