சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

இடமாறுதலுக்கு துடிக்கும் முறைகேடு அதிகாரி!

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
இடமாறுதலுக்கு துடிக்கும் முறைகேடு அதிகாரி!''ரோந்து பணியை கூட பார்க்க மாட்டேங்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊர் போலீசாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, பொய்மான் கரடு, பாரப்பட்டி, சந்தியூர், ஆட்டையாம்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்கள்ல இருந்து ஏராளமான லாரி

டீ கடை பெஞ்ச்


இடமாறுதலுக்கு துடிக்கும் முறைகேடு அதிகாரி!



''ரோந்து பணியை கூட பார்க்க மாட்டேங்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊர் போலீசாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, பொய்மான் கரடு, பாரப்பட்டி, சந்தியூர், ஆட்டையாம்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்கள்ல இருந்து ஏராளமான லாரி டிரைவர்கள், எம்.சாண்ட், ஜல்லி, அரளி பூக்களை ஏத்திட்டு, பனமரத்துப்பட்டி பிரிவு சாலை வழியா போறாவ வே...

''இந்த பகுதியில, நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில, தாசநாயக்கன்பட்டி முதல் மல்லுார் வரை, வாகன போக்குவரத்தை கண்காணிக்கணும்... ஆனா, அவங்க பெரும்பாலும் பனமரத்துப்பட்டி பிரிவு சாலையிலயே முகாமிடுதாவ வே...

''அங்க வாகன சோதனைங்கிற பேருல, எம்.சாண்ட், ஜல்லி ஏத்திட்டு வர்ற லாரிகளை மறிச்சு, மாமூல் வசூல் பண்ணுதாவ... இதனால, நெடுஞ்சாலை ரோந்து பணியை அம்போன்னு விட்டுடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''அறிவாலயத்துல ஆதிக்கம் செலுத்தறவாளுக்கு, 'செக்' வைக்க, துணை அமைப்புச் செயலர் பதவியை உருவாக்கிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்துல பணியாற்றும் மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள் சிலரது அதிகாரம் கொடி கட்டி பறக்கறது... அறிவாலயத்தை கண்காணிக்கவும், அவாளுக்கு, 'செக்' வைக்கவும், துணை அமைப்பு செயலர்னு புதிய பதவியை உருவாக்கி, 'அன்பகம்' கலைக்கு வழங்கியிருக்கா ஓய்...

''இவர், கட்சியின் இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தின் நிர்வாகியா இருந்தவர்... மற்றபடி இதுக்கு முன்னாடி, கட்சியில எந்த பொறுப்புலயும் இருந்தது இல்லை... இதனால, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில இருக்கா ஓய்...

''இதனால, அறிவாலயத்துல கலை பதவி ஏத்துக்க வந்தப்ப, மூத்த நிர்வாகிகள் பலரும் அங்கே இருந்து வெளிநடப்பு பண்ணிட்டா... அதேபோல, அறிவாலய மேலாளரும் அந்தப் பக்கமே எட்டி பார்க்காம இருந்துட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.உடனே, ''பல கோடி ரூபாய் முறைகேடு செய்துட்டு, இடமாறுதல்ல, 'எஸ்கேப்' ஆக பார்க்கிறாரு பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''நாகை நகராட்சி பகுதியில, 5 கோடி ரூபாய் மதிப்புல, 10 பூங்காக்கள் அமைச்சாங்க... டெண்டர் ஒப்பந்தப்படி, பூங்காக்கள்ல கண்காணிப்பு கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், புல்வெளிகள்
அமைச்சிருக்கணும் பா...

''ஆனா, 40 சதவீத பணிகள் மட்டுமே முடிஞ்ச சூழல்ல, கான்ட்ராக்டர்களுக்கு முழு தொகையையும் நகராட்சி உயர் அதிகாரி, 'செட்டில்' பண்ணிட்டாருங்க... அதே மாதிரி, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்காம, அவங்களிடம் பேரம் பேசி, வாடகை ஒப்பந்த ரசீது போட்டு குடுத்துட்டாரு பா...

''இந்த மாதிரி நிறைய முறைகேடுகளை பண்ணிட்டு, இப்ப சென்னையில தனக்கு இடமாறுதல் கேட்டு, அங்கேயே ஆளுங்கட்சி புள்ளிகளை சுத்தி வந்துட்டு இருக்காரு... 'அவருக்கு இடமாறுதல் தராம, நாகை நகராட்சி முறைகேடுகள் பத்தி விசாரணை நடத்தணும்'னு, நேர்மையான ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''ஏகராஜ் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, அனைவரும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X