தமிழக சட்டசபைக்கு 'பர்த் டே' கொண்டாட்டம் நூற்றாண்டு விழா!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (29+ 27)
Share
Advertisement
தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டில்லியில் நேற்று நேரில் சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அழைப்புவிடுத்தார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கடந்த மாதம் டில்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த
தமிழக சட்டசபை,பர்த் டே,  கொண்டாட்டம்

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டில்லியில் நேற்று நேரில் சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அழைப்புவிடுத்தார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கடந்த மாதம் டில்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றை வலியுறுத்தி மனு அளித்தார்.


அழைப்புஅப்போதே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் முதல்வர் சந்திப்பதாக திட்டம் இருந்தது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஜனாதிபதியின் உடல் நலக்குறைவு ஆகியவை காரணமாக அந்த சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத தாமதத்துக்கு பின், ஜனாதிபதி மாளிகையிலிருந்து நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் டில்லிக்கு வந்தார்.நேற்று காலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேசினார். தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு உடனிருக்க, அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, தமிழக அரசின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்ததோடு, மனோகர் தேவதாஸ் என்பவர் எழுதிய, 'மல்ட்டிபிள் பேசட்ஸ் ஆப் மதுரை' என்ற, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின், அவருக்கு வழங்கினார்.இந்த சந்திப்புக்கு பின் சென்னை கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், டில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை, மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வைத்து தனித்தன்மையோடு செயல்பட்ட பெருமைக்குரியது தான் தமிழக கடந்த 1921ம் ஆண்டு ஜன., 12ல் இந்த சபை துவக்கி வைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தும் வகையில், சட்டசபை நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.


கோரிக்கைஅந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுக் கொள்வதற்காக ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தேன்; அதை அவரும் ஏற்றுக் கொண்டு உள்ளார்.அந்த விழாவின் மற்றொரு நிகழ்வாக, தமிழக சட்டசபைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த தகவலும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் கருணாநிதியின் பெயரில் மிக பிரமாண்டமான நுாலகம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது. அந்த நுாலக அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம்.சென்னை கிண்டியில் கட்டப்படவுள்ள அரசு மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவிலும், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடைந்துள்ளதை நினைவுபடுத்தும் வகையில் அமையவுள்ள, நினைவுத் துாண் அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்க வரும்படி கேட்டுள்ளோம்.


கடிதம்எங்கள் கோரிக்கையை ஏற்று, இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். எந்த தேதி என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்து ஜனாதிபதி அலுவலகம் தகவல் தெரிவிக்கும் என, நம்புகிறேன்.ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை குறித்து, முதல்வராக பொறுப்பேற்றதும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த பிரச்னை தற்போது கோர்ட்டில் உள்ளது.சட்டப்பூர்வமாகவே இதை அணுகுவோம். எனவே, இந்த சந்திப்பில் இந்த பிரச்னை குறித்து ஜனாதிபதியிடம் பேசவில்லை.மேகதாது அணை பிரச்னை பற்றி பிரதமரைச் சந்தித்தபோது, அது குறித்த தமிழகத்தின் நிலையை அவரிடம் தெரிவித்துவிட்டேன். மேலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, அதில் கர்நாடக அரசின் முடிவு தவறு என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழு டில்லி வந்து, ஜல்சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கியுள்ளது.
மேகதாது அணைக்கு அனுமதி தரமாட்டோம் என, மத்திய அரசும் உறுதி தந்துள்ளதை நம்புகிறோம்.இந்த விஷயத்தில் பிரதமரும் நம்பிக்கை தந்துள்ளார்; ஜல்சக்தி அமைச்சரும் நம்பிக்கை தந்துள்ளார். மேலும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிலும் உள்ளது. எனவே, சட்டரீதியாகவே இப்பிரச்னையை தமிழக அரசு சந்திக்கும்.இந்த விவகாரம் தொடர்பாக, மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசோ, கர்நாடக அரசோ கூட்ட விரும்பினால், அது போன்ற நடவடிக்கைகளில் தமிழகம் பங்கேற்காது.

இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.கொரோனா மூன்றாவது அலை வரக் கூடாது என்பதே அனைவரது எண்ணம். ஒருவேளை அது போன்ற அலை வந்தால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து உரிய திட்டங்களுடன் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் கல்லுாரிகள் திறக்க முடியாத நிலை நிலவுகிறது. அது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து, உரிய முறையில் முடிவெடுக்கப்படும்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து, தி.மு.க., -- எம்.பி.,க்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அவர்கள் எழுப்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

**********************************


பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி


புதுடில்லி :அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு சபைகளின் நடவடிக்கைகளும் நேற்று முற்றிலுமாக முடங்கின.


கோஷங்கள்பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று காலை துவங்கியது. அப்போது, சமீபத்தில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக காங்.,கை சேர்ந்த விஜய் வசந்த் உட்பட, நான்கு புதிய எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். அதன் பின், சமீபத்தில் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த துவங்கினார்.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க, 'நோட்டீஸ்' அளித்துள்ளதாக லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்., உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்படி கோஷங்களை எழுப்பினர்.''புதிய அமைச்சர்களை சபையில் அறிமுகப்படுத்துவது மரபு. எனவே, பாரம்பரிய நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்,'' என, சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.


கண்டனம்எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டதால், புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர் பெண்கள், தலித்துகள், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழை விவசாயிகளின் பிள்ளைகள். இவர்களை சபையில் அறிமுகப்படுத்தும்போது, உறுப்பினர்கள் அவர்களை வரவேற்று ஆரவாரம் செய்வர் என எதிர்பார்த்தேன்.


இரங்கல்சாதாரண பின்னணியைச் சேர்ந்த இவர்கள் அமைச்சர்களாகி உள்ளதை ஏற்க முடியாத சிலர், தங்கள் எதிர்ப்பை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். இது போன்ற மனநிலையை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட செயல்களை இந்த சபையில் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இவ்வாறு பிரதமர் கூறினார்.எதிர்க்கட்சியினர் கூச்சலிடுவதை நிறுத்தாததால், புதிய அமைச்சர்கள் பட்டியலை சபாநாயகரிடம் பிரதமர் சமர்ப்பித்தார்.எதிர்க்கட்சியினரின் செயலுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். ''என் 24 ஆண்டுகால பார்லிமென்ட் அனுபவத்தில் இதுபோல நிகழ்ந்ததில்லை,'' என்றார்.இதையடுத்து சமீபத்தில் உயிரிழந்த, முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்று அமைதி காத்தனர். மவுன அஞ்சலி செலுத்திய பின், விவசாய சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தும்படி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் மற்றும் சில காங்., உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மீண்டும் சபையில் அமளி ஏற்பட்டதை அடுத்து, சபையை மதியம், 2:00 மணி வரை, சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
சபை மீண்டும் கூடியபோது பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்கட்சியினர் தொடர் ரகளையில் ஈடுபட்டனர். துவங்கிய 10 நிமிடங்களில் மதியம், 3:30 மணி வரை சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.சபை மீண்டும் கூடியபோது இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் உதவியுடன் முக்கிய எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களின் 'மொபைல் போன்' உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். இதற்கு பின்னும் எதிர்க்கட்சியினர் அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, 'ராஜ்யசபாவில் 17 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என பல்வேறு எதிர்கட்சியினரும் 'நோட்டீஸ்' அளித்தனர்.இதை சபை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை. ''ஒரே நேரத்தில் 17 பிரச்னைகள் குறித்து விவாதிக்க இயலாது. வரும் நாட்களில் அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார். அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின் நேற்று முழுதுமாக ஒத்திவைக்கப்பட்டது.


மத்திய அமைச்சரின் குடியுரிமையில் சர்ச்சை!''மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நிசித் பிரமானிக், வங்கதேசத்தை சேர்ந்தவர். இது குறித்து பிரதமர் விசாரணை நடத்த வேண்டும்,'' என, அசாம் காங்., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ரிபுன் போரா, பிரதமருக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார்.இது குறித்து, திரிணமுல் காங்.,கை சேர்ந்த சுகேந்து சேகர் மற்றும் காங்., உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர்.''இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த தலைவர் மீது சுமத்தப்படும் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகள் கண்டனத்துக்கு உரியது,'' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.


'தடுப்பூசி போட்டால் பாகுபலி ஆகலாம்'பார்லிமென்ட் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:நாடு முழுதும் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போரிட, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு. ஹிந்தியில் கைகளுக்கு 'பாகு' என பெயர். நீங்கள் கைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் வாயிலாக கொரோனாவை எதிர்க்கும் பாகுபலி ஆகிறீர்கள். நாட்டில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர், பாகுபலி ஆகி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
20-ஜூலை-202122:06:10 IST Report Abuse
T.sthivinayagam இரண்டு சதவீததக்கும் குறைவான ஆதரவு பெற்ற கட்சியை புகழ்வது, குறைந்த சதவீதனர்க்காக பெரும்பாலானவர்களுக்கு எதிராக சொல்லுவது. இது தானா தருமம்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
20-ஜூலை-202119:40:55 IST Report Abuse
தமிழ்வேள் வீதிக்கு மூன்று , வீதிக்கு முப்பது என்று பண்ணை வைத்து நடத்தியவன் பதவியிலிருந்ததே , அந்த பதவிக்கு கேவலம் என்னும்போது , அந்த ஆளின் பட திறப்புக்கு பாரத ராஷ்ட்ரபதி வருகிறார் என்றால் , அது ராஷ்டிரபத்திற்கு பெருமை சேர்க்காது ...புறக்கணித்தல் நல்லது ..ஊருக்கு ஊர் தொடுப்பு வைத்து திரிந்த கட்சிக்கார கூட்டாளிகள் படம் திறக்கலாம் ..நல்ல பொருத்தம் ..வேண்டுமானால் காமஹாசன் தகரமுத்து போன்ற ஒரே அலைவரிசை கூட்டாளிகள் சீடர்கள் தொண்டர்களை பங்கேற்க வைக்கலாம் ....பொருத்தமாகவும் இருக்கும் ...காரியுமிழவும் வசதியாக இருக்கும் ....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூலை-202118:54:03 IST Report Abuse
Pugazh V ., அதை சொல்லி விட்டு முறைப்புடன் வெளியே வரவேண்டாமா,?இணக்கமாக இருக்க வேண்டும் என்று இதே பேப்பரில் கொஞ்ச நாள் முன்னால் எழுதினார்களே, அப்போது நீங்கள் இதை சொல்ல வில்லையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X