பொது செய்தி

தமிழ்நாடு

முடங்கிய புறவழிச்சாலை பணி: நெரிசலில் தவிக்கும் அன்னுார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அன்னுார்,:நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டாகியும், புறவழிச்சாலை பணி முடங்கிக் கிடப்பதால், அன்னுார் மக்கள் தவிக்கின்றனர்.கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம்- அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக உள்ளது அன்னுார். தாலுகாவில் அதிகளவில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, பவுண்டரி, விசைத்தறிகள் உருவானதால், குடியிருப்புகளும்

அன்னுார்,:நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டாகியும், புறவழிச்சாலை பணி முடங்கிக் கிடப்பதால், அன்னுார் மக்கள் தவிக்கின்றனர்.கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம்- அவிநாசி மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக உள்ளது அன்னுார். தாலுகாவில் அதிகளவில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, பவுண்டரி, விசைத்தறிகள் உருவானதால், குடியிருப்புகளும் அதிகரித்து விட்டன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளன.இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களிலும், குறிப்பாக வார சந்தை நடக்கும் சனிக்கிழமையன்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்டநேரம் காத்திருந்த பின்னரே, அன்னுாரை கடந்து செல்ல முடிகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும்படி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், 20 ஆண்டுகளாக போராடி வருகின்றன.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கான உத்தரவும் வெளியானது. திட்டத்தில், அன்னுார் - கோவை சாலையில், அன்னுாருக்கு நான்கு கிலோ மீட்டர் முன்னதாக, கரியாம்பாளையத்தில் துவங்கி, ஆலாம்பாளையம், சொக்கம்பாளையம் வழியாக, அவிநாசி சாலையில் நாகமாபுதூரை கடந்து சாணாம்பாளையம் வழியாக சத்தி சாலையில், அய்யப்பரெட்டிபுதுார் பிரிவில் சேரும்படி கிழக்குப் புற வழிச்சாலை திட்டமிடப்பட்டது.புறவழிச்சாலை 8.5 கி.மீ., தொலைவுக்கு, 150 அடி அகலத்தில் அமைய இருந்தது. நிலத்தை கையகப்படுத்த, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டார். 2019ல் நிலத்தை கையகப்படுத்த, கரியாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த, 43 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்; அதன் பிறகு வரும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள், நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்தனர். ஒரு சிலர், நிலத்தை கையகப்படுத்த ஒத்துழைத்தனர். ஆனால், அடுத்த கட்டத்துக்கு பணி மேற்கொள்ளவில்லை.ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பணி அத்துடன் முடங்கியுள்ளது. இந்த புறவழிச்சாலை, கரியாம்பாளையம் ஊராட்சி, அன்னுார் பேரூராட்சி, அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஆகிய மூன்று உள்ளாட்சி அமைப்புகள் வழியாக செல்கிறது. புறவழிச் சாலை அமைக்கப்பட்டால் அன்னுார் நகரில், 50 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும்.அன்னூர் மக்கள் கூறியதாவது:தற்போது ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து, வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆவணி மாதம் பிறந்தால் முகூர்த்த நாட்களில், அன்னுாரை கடந்து செல்லவே முடியாது. அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.கடந்த, 20 ஆண்டுகளாக கோரி வந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நோட்டீசும் வழங்கிய பின் முடங்கியிருப்பது வருத்தமளிக்கிறது, அரசு உடனடியாக கிழக்கு புறவழிச் சாலை பணியை துவக்க வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் இருந்து மூன்று மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X