அ.தி.மு.க., - ஓ.பி.எஸ்.,சுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - ஓ.பி.எஸ்.,சுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். பாரத்

சென்னை : 'வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். பாரத் பெட்ரோலியம் மற்றும் கெயில் போன்ற, மத்திய அரசு நிறுவனங்களால், கடந்த ஆட்சிக் காலத்தில், 2018 முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும், 2018 ஜனவரி முதல், 2021 மார்ச் முடிய, 1,000 கி.மீ., நீளத்திற்கு, பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய்கள் தமிழகத்தில் பதிக்கப்பட்டு உள்ளன.

எண்ணுார் - மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து, இத்திட்டம், 2019 மார்ச் 6ல் பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோல, ராமநாதபுரம் - துாத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம், பிப்., 17ம் தேதியன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பங்கேற்றார்.உண்மை நிலை இப்படி இருக்க, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது குறித்து, எதுவும் அறியாதது போல, இத்தகைய திட்டங்கள் தற்போது தான் புதிதாக செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், குழாய் பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது, விந்தையாகவும், வியப்பாகவும் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டங்களை பொறுத்தவரை, நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், கூடுதல் இழப்பீடு வழங்கியும், இந்த திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. எங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ, அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசால் வலியுறுத்தப்படுகிறது. விவசாயிகள் நலனில், அரசு பெரிதும் அக்கறை கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தங்கள் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கையை, இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X