பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி ; முதல்நாளே சபை அலுவல்கள் முடக்கம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி : அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு சபைகளின் நடவடிக்கைகளும் நேற்று முற்றிலுமாக முடங்கின. கோஷங்கள்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று காலை துவங்கியது. அப்போது, சமீபத்தில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி

புதுடில்லி : அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு சபைகளின் நடவடிக்கைகளும் நேற்று முற்றிலுமாக முடங்கின.

கோஷங்கள்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று காலை துவங்கியது. அப்போது, சமீபத்தில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக காங்.,கை சேர்ந்த விஜய் வசந்த் உட்பட, நான்கு புதிய எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். அதன் பின், சமீபத்தில் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த துவங்கினார்.

அப்போது அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க, 'நோட்டீஸ்' அளித்துள்ளதாக லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்., உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்படி கோஷங்களை எழுப்பினர்.''புதிய அமைச்சர்களை சபையில் அறிமுகப்படுத்துவது மரபு. எனவே, பாரம்பரிய நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்,'' என, சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

கண்டனம் : எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டதால், புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர் பெண்கள், தலித்துகள், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழை விவசாயிகளின் பிள்ளைகள். இவர்களை சபையில் அறிமுகப்படுத்தும்போது, உறுப்பினர்கள் அவர்களை வரவேற்று ஆரவாரம் செய்வர் என எதிர்பார்த்தேன்.

இரங்கல் : சாதாரண பின்னணியைச் சேர்ந்த இவர்கள் அமைச்சர்களாகி உள்ளதை ஏற்க முடியாத சிலர், தங்கள் எதிர்ப்பை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். இது போன்ற மனநிலையை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட செயல்களை இந்த சபையில் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இவ்வாறு பிரதமர் கூறினார்.எதிர்க்கட்சியினர் கூச்சலிடுவதை நிறுத்தாததால், புதிய அமைச்சர்கள் பட்டியலை சபாநாயகரிடம் பிரதமர் சமர்ப்பித்தார்.

எதிர்க்கட்சியினரின் செயலுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். ''என் 24 ஆண்டுகால பார்லிமென்ட் அனுபவத்தில் இதுபோல நிகழ்ந்ததில்லை,'' என்றார். இதையடுத்து சமீபத்தில் உயிரிழந்த, முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்று அமைதி காத்தனர். மவுன அஞ்சலி செலுத்திய பின், விவசாய சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தும்படி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் மற்றும் சில காங்., உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து சபையில் அமளி ஏற்பட்டதை அடுத்து, சபையை மதியம், 2:00 மணி வரை, சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.சபை மீண்டும் கூடியபோது பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்கட்சியினர் தொடர் ரகளையில் ஈடுபட்டனர். துவங்கிய 10 நிமிடங்களில் மதியம், 3:30 மணி வரை சபை மீண்டும் ஒத்திவைக்கப் பட்டது.சபை மீண்டும் கூடியபோது இஸ்ரேலின் 'பெகாசஸ்' மென்பொருள் உதவியுடன் முக்கிய எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களின் 'மொபைல் போன்' உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

இதற்கு பின்னும் எதிர்க்கட்சியினர் அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, 'ராஜ்யசபாவில் 17 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என பல்வேறு எதிர்கட்சியினரும் 'நோட்டீஸ்' அளித்தனர்.இதை சபை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை. ''ஒரே நேரத்தில் 17 பிரச்னைகள் குறித்து விவாதிக்க இயலாது. வரும் நாட்களில் அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார். அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின் நேற்று முழுதுமாக ஒத்திவைக்கப்பட்டது.'தடுப்பூசி போட்டால்பாகுபலி ஆகலாம்'பார்லிமென்ட் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:நாடு முழுதும் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போரிட, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு. ஹிந்தியில் கைகளுக்கு 'பாகு' என பெயர். நீங்கள் கைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் வாயிலாக கொரோனாவை எதிர்க்கும் பாகுபலி ஆகிறீர்கள். நாட்டில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர், பாகுபலி ஆகி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய அமைச்சரின்குடியுரிமையில் சர்ச்சை!''மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நிசித் பிரமானிக், வங்கதேசத்தை சேர்ந்தவர். இது குறித்து பிரதமர் விசாரணை நடத்த வேண்டும்,'' என, அசாம் காங்., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ரிபுன் போரா, பிரதமருக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார். இது குறித்து, திரிணமுல் காங்.,கை சேர்ந்த சுகேந்து சேகர் மற்றும் காங்., உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர்.''இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பழங்குடி இனத்தை சேர்ந்த தலைவர் மீது சுமத்தப்படும் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகள் கண்டனத்துக்கு உரியது,'' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X