சென்னை : 'இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல், மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:மீன்பிடி தடை காலம் முடிந்து, ஜூன் 30ல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போதில் இருந்தே, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், அவர்களின் வலைகளை அறுத்து, கடலில் வீசி எறியும் சம்பவங்களும் தொடர்கின்றன.
ராமேஸ்வரத்தில் இருந்து, 17ம் தேதி, 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு சென்று உள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே, தமிழகத்திற்கு உட்பட்ட பகுதியில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, கடலில் துாக்கிப் போட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற செயல், மீனவ மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் அவர்களின் வருமானமும் குறைந்து வருகிறது. எனவே, முதல்வர் ஸ்டாலின், இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல், மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைப்பட்டால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை பெற்று, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், உத்தரவாதம் வழங்க வேண்டும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார்.