உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த 1952 முதல், 2020 வரை 68 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தோர் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ்., ஆகியோர். இவர்கள் அனைவரும், 'மத்திய அரசு' என்று தான் கூறினர். அதே மத்திய அரசில், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.,வை சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களும், மத்திய அரசு என்று தான் கூறினர். முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் அவ்வாறு தான் கூறினார்.

கருணாநிதி நினைத்திருந்தால், தான் முதல்வராக இருந்தபோது தமிழ் புத்தாண்டை சித்திரை ஒன்றாம் தேதியில் இருந்து, தை முதல் தேதிக்கு மாற்றியது போல், இதையும் 'ஒன்றிய அரசு' என மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. தமிழறிவும், தி.மு.க., கொள்கையும் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரை விட, முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது போலும்! சமீபத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உடனே ஸ்டாலின், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறுகிறார். பாடநுால் கழகத்தின் தலைவர் லியோனி, 'பாட புத்தகத்திலும் ஒன்றிய அரசு என பதிப்பிக்கப்படும்' என்கிறார். பத்து ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. ஏராளமான வாக்குறுதிகளை தந்து தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியை, முதல்வர் ஸ்டாலின் அரசு தேட வேண்டும். அதை விடுத்து, 'ஒன்றிய அரசு' என அதையும், இதையும் கூறி காலத்தை வீணாக்காதீர். ஒன்றிய அரசு எனும் சொல்லால், தமிழக மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்பட போவது இல்லை. அதனால் நிர்வாகத்தை கவனியுங்களேன், முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE