சென்னை : ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவிகளின், 'சர்வர்' முடங்கியதால், நேற்று கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு,அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.கடைகளில் விற்பனை முனைய கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப் படுகின்றன.விற்பனை மற்றும் இருப்பு விபரங்களும், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. நேற்று காலை கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்க, வரிசையில் காத்திருந்தனர்.

ஊழியர்களும், விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்து, பொருட்களை வழங்கியபடி இருந்தனர். திடீரென காலை, 10:00 மணி முதல், 'சர்வர்' பாதிப்பால், அனைத்து கடைகளிலும், விற்பனை முனைய கருவிகள் செயல்பாடின்றி முடங்கின. விற்பனை விபரத்தை, கடை ஊழியர்களால் பதிவு செய்ய முடியாததால், பொருட்களை வழங்கவில்லை. இதனால், சிலர் பொருட்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.மதியத்திற்கு மேல் சர்வர் பாதிப்பு சரிசெய்யப்பட்டு, மீண்டும் பொருட்கள் வழங்கப்பட்டன.