கவர்ச்சி அறிவிப்புடன் பல கோடி அமுக்கிய பெண்; பாதிக்கப்பட்டோரே பிடித்து போலீசில் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவர்ச்சி அறிவிப்புடன் பல கோடி அமுக்கிய பெண்; பாதிக்கப்பட்டோரே பிடித்து போலீசில் ஒப்படைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
ஓமலூர்: கவர்ச்சி அறிவிப்பால், பல கோடி ரூபாய் அமுக்கிய பெண்ணை, பாதிக்கப்பட்ட மக்களே பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டம், ஓமலூர், தொளசம்பட்டி, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணி, 48. இவரது மனைவி சுதா, 42. இவர்களுக்கு, 20 வயதில் மகன் உள்ளார். சேலத்தை சேர்ந்தவர் புஷ்பா, 34. இவருடன் சுப்ரமணி சேர்ந்து, சேலம், ஐந்து ரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலக பின்புறம், 'அட்சயம் கோல்டு'

ஓமலூர்: கவர்ச்சி அறிவிப்பால், பல கோடி ரூபாய் அமுக்கிய பெண்ணை, பாதிக்கப்பட்ட மக்களே பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.


சேலம் மாவட்டம், ஓமலூர், தொளசம்பட்டி, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணி, 48. இவரது மனைவி சுதா, 42. இவர்களுக்கு, 20 வயதில் மகன் உள்ளார். சேலத்தை சேர்ந்தவர் புஷ்பா, 34. இவருடன் சுப்ரமணி சேர்ந்து, சேலம், ஐந்து ரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலக பின்புறம், 'அட்சயம் கோல்டு' நிதி நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டுக்கு பின் இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து, 50க்கும் மேற்பட்டோரிடம், கோடிக்கணக்கில் பணம் பெற்றனர். ஆறு மாதங்களுக்கு முன், நிதி நிறுவனத்தை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்து, அவர்களை தேடினர். அப்போது, நெய்வேலி, பி.டி.ஆர்., ராஜன் தெருவில் வசித்த புஷ்பாவை கண்டுபிடித்து, பணத்தை கேட்டனர். அவர், தொளசம்பட்டியில் உள்ள கணவரிடம் உள்ளது' எனக்கூறினார். இதனால், அவரை அழைத்துக்கொண்டு, கடந்த, 15ல், தொளசம்பட்டிக்கு வந்தனர். அப்போது, ஒன்றரை ஆண்டாக சுப்ரமணி அங்கு வராதது தெரிந்தது. இதனால், தொளசம்பட்டி போலீசார், புஷ்பாவை, அன்றே, சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, சுப்ரமணியை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள், பணத்தை பெற்றுத்தருமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X