சென்னை: ''முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் நிச்சயம் மாறும்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.அதில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.7,117 கோடி மதிப்பில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப்பணிகளை துவக்கிவைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பண்பாட்டின் முகவரியாக திகழும் தற்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறி வருகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் நிச்சயம் மாறும். தொழில் துவங்க உகந்த மாநிலங்களில் தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். இதுவே லட்சியம். 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் ஜிடிபி கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும். உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மின்வாகன உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தொழில்துறையின் பொற்காலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE