பொது செய்தி

தமிழ்நாடு

தொப்பி தாத்தா!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பல நாட்களாக கூட்டி அள்ளப்படாத சருகுகளால் நிறைந்திருந்தது பூங்காவிற்கான அந்தப் பாதை. சோர்ந்த மனதுடன் அடியெடுத்து வைத்தார் அப்துல்லா. சருகுகள் மிதிபட்டு இதயத்தின் ஆழத்தில் கடுமையான வலியை உருவாக்கின. பராமரிப்பில்லாத போதும் காட்டுச் செடிகளாய் கிளை பரப்பி பூத்துக் குலுங்கின மலர்ச் செடிகள். மல்லிகை, முல்லை, பாரிஜாதம், செவ்வந்தி, ரோஜா, செண்பகம் என வண்ணக்
 தொப்பி தாத்தா!

பல நாட்களாக கூட்டி அள்ளப்படாத சருகுகளால் நிறைந்திருந்தது பூங்காவிற்கான அந்தப் பாதை. சோர்ந்த மனதுடன் அடியெடுத்து வைத்தார் அப்துல்லா.

சருகுகள் மிதிபட்டு இதயத்தின் ஆழத்தில் கடுமையான வலியை உருவாக்கின. பராமரிப்பில்லாத போதும் காட்டுச் செடிகளாய் கிளை பரப்பி பூத்துக் குலுங்கின மலர்ச் செடிகள். மல்லிகை, முல்லை, பாரிஜாதம், செவ்வந்தி, ரோஜா, செண்பகம் என வண்ணக் குவியல்கள்...விழிகள் கசிய, விரல்கள் நடுங்க செடிகளை வருடியதும், 'தாத்தா தாத்தா' என்று பிஞ்சு விரல்கள் பிடித்திழுப்பதைப் போலிருந்தது.

சுருங்கிய விழிகள் மங்கலாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் அப்துல்லா. தலையில் வைத்திருந்த தொப்பி வழியாக வியர்வை ஊற்றெடுத்தது.'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்ற எச்சரிக்கைப் பலகை தாண்டி பிஞ்சு விரல்கள் நீளும். 'நா பறிச்சித் தாரேன்' என ஒவ்வொன்றாய் மழலைகளின் கைகளில் பறித்துக் கொடுப்பார்.'ஓய் நீ எல்லாம் காவலுக்காக நிக்கியா, களவாங்க நிக்கியா...' பூங்காவை சுத்தம் செய்ய வரும் சாந்தி அதட்டுவாள்.'பறிச்சுட்டுப் போகட்டும் விடு...! ''ம்க்கும்...' கோபத்துடன் நடப்பதைப் போல கூடையை இடுப்பில் வைத்து நடந்தாலும் அவள் பேச்சிலும் பாசம் ஒழுகும். இப்போ பறிக்கவும், ரசிக்கவும் ஆளில்லாமல்... முகத்தை மூடி அழுதார்.மூன்று மாதத்திற்கு முன் வரை இந்த பூங்காவில் மழலைகளும், மலர்களும் போட்டி போட்டு அழகை நிரப்பிக் கொண்டிருந்தன. 'தாத்தா தாத்தா... தாத்தா தொப்பித் தாத்தா... தொப்பித் தாத்தா...'குழந்தைகளின் குரல்கள் ஆங்காங்கே தேங்கி நின்று தன்னை மோதுவதாய் தோன்ற, தேம்பித் தேம்பி அழ துவங்கினார்.ஐந்து நேரத் தொழுகை, நோன்பு, ஊர் நண்பர்கள், தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் என இருந்தாலும், 10 வருடத்திற்கு முன் யூசுப் அத்தா பூங்கா பராமரிக்க ஆள் இருக்கானு கேக்க, அப்துல்லா மனசு கூச்சலிட்டது.
'எவ்வளவு குழந்தைக... கண் நிறைய பாத்துட்டே இருக்கலாமே. அல்லா நமக்கு புள்ளையத் தராட்டா என்ன... வலிய வந்து புள்ளைக நெறஞ்ச இடத்துல ஒரு வேலையத் தாரானே... அல்ஹம்துல்லில்லாஹ்...''நானே அந்த வேலையிலச் சேந்துக்கிறேன்...' மகிழ்ச்சி பொங்கச் சொல்லி சேர்ந்து கொண்டார். அவருக்கும், மனைவிக்கும் பூங்காவை பராமரிக்கும் வேலை கிடைத்தது. இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் பாதுகாக்க, பூங்காவின் அருகில் சிறு வீடும் அமைத்துக் கொடுத்தனர். 'என்னங்க எவ்ளோ குழந்தைக... அழகும் அறிவுமா... என்ன இருந்தாலும் என் வயித்துல மட்டும். ஏங்க இப்படி...''சீ வாயை மூடு... அல்லா நமக்குனு ஒரு புள்ளைய தந்திருந்தா, அத மட்டும் தான் பாசமா பாத்திருப்போம்... இப்ப பாரு எந்த புள்ளையப் பாத்தாலும் நம்ம புள்ளையா கொஞ்ச மனசு வருதுல்ல... அழாத சாரா...'அழுது அழுது அவளும் போன ஆண்டு இறைவனிடம் போய் சேர்ந்துட்டா. அப்துல்லாவோ இந்த பூங்காவே கதின்னு கிடக்கிறார். சாந்தி வந்து எவ்வளவு சுத்தமா கூட்டி அள்ளினாலும், 'பிஞ்சி கால் நோவும்ல...' சொல்லிக் கொண்டே சின்னச் சின்ன குச்சிகளையும், கற்களையும் பொறுக்கிப் போடுவார்.ஆரம்பத்தில் விளையாட வரும் வசதி படைத்தவர்கள் பிள்ளைகளை அவர் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். நாளடைவில், 'தாத்தா, புள்ளையைப் பாத்துக்கங்க...' என சொல்லும் அளவிற்கு எல்லா குழந்தைகளுக்கும் தாத்தா ஆனார். விரிந்து பரந்த ஆல மரத்தின் அருகில் அழகிய நிறங்களில் ஊஞ்சல்கள் தொங்கும். அந்த இடம் தான் அவருக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமான இடம்.'தொப்பி தாத்தா... துாக்கி வை... கொஞ்சம் ஆட்டி விடு தாத்தா... வேகமா... இன்னும் வேகமா...''தாத்தா இவ எவ்வளவு நேரமா ஆடுறா... இறங்கச் சொல்லு...'எத்தனை மழலைக் குரல்கள் தன் உயிரோடு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. அந்த சிரிப்பும், கொண்டாட்டமும் தொலைந்து போனதே! அழுகையை அடக்க முடியவில்லை. சாரா இறப்புக்கு பின் இன்று தான் இப்படி அழுகிறார்.தொற்று நோய் பரவலுக்கு பின் ஊரடங்கு இன்று, நாளை, மறுநாள் மாறிவிடும் என்ற நினைப்பிலே இத்தனை நாள் போய் விட்டது. குழந்தைகள் ஆரவாரம் இல்லாத மவுனத்தில் நுழைய விருப்பமில்லாமல் வீட்டோடு கிடந்தார். இன்று மனம் கேட்க வில்லை. மணல் குவியல்களில் மழலை தடங்களையாவது பார்த்து வருவோம் என உள்ளே நுழைந்தார். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு அழகாய் பேசும், சிரிக்கும், சண்டையிடும், 'தாத்தா... தாத்தா...' என கழுத்தை இறுக்கமாகக் கட்டிக் கொள்ளும். ஆயிரம் நினைவுகளை அவருக்குள் பதிய வைத்து மனதைப் பிணைத்துக் கொண்டு கைகளை ஆட்டி விடைபெறும். வெள்ளைத்தாளாய் மனது கவலை களின் சிரிப்பைக் கொப்பளிக்கும்...!மீண்டும் இந்த இடம் எப்போது பொலிவுறும்? இந்த நோய் தொற்றிலிருந்து எப்போது விடுபடுவோம்... என் வாழ்க்கை இனி என்ன ஆகும்...கேள்விகள் கண்ணீராய் ஒழுகியது. எவ்வளவு நேரம் ஊஞ்சலைப் பிடித்தபடி இருந்தார் என்பது தெரியவில்லை.'அப்துல்லா அப்துல்லா...' என்ற யூசுப் அத்தாவின் குரல், வேலிப் பக்கமிருந்து கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.'மேலப்பாளையம் எத்திம்கானா அசரத்து, சம்பளம் பத்தலைன்னு போயிட்டாரு. பசங்களப் பாத்துக்க யாருமில்லை... நீங்க அங்க போயி அதுகள பாத்துக்கிறீகளா... உங்க காலம் பூரா அங்கேயே இருக்கலாம்.'சாந்தியும், அவ புருசனும் பூங்காவ பாத்துப்பாங்க என்ன சொல்றீங்க...' வண்டியில் உட்கார்ந்தபடியே அவசர அவசரமாகப் பேசினார்.தேம்பித் தேம்பி அழும் அப்துல்லாவை ஏதும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் யூசுப் அத்தா. 'நானும், அனாதைகளை ஆதரிப்போரும் சுவனத்தில் இப்படி இருப்போம்- என ஆட்காட்டி விரலையும், அடுத்த விரலையும் சேர்த்து காட்டி நபிகள் நாயகம் கூறினார். 'எத்திம்களை பராமரித்து, சுவனத்தில் நபிகள் நாயகத்துடன் சேர்ந்தே இருப்பீர்களாக அப்துல்லா!'-எத்திம்கானா முழுக்க மின் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்துல்லா தன் வங்கி சேமிப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து ஒரு ஆடு வாங்கினார். எத்திம்கானாவில் 30 ஆண் குழந்தைகள், 30 பெண் குழந்தைகள். இரு பாலருக்கும் தனித்தனி கட்டடங்கள்.பக்ரீத் அன்று ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார் அப்துல்லா. ஒவ்வொரு குழந்தைக்கும் வயிறு நிறைய, மனது நிறைய மாமிசத்தை சமைத்து பரிமாறினார். 60 குழந்தைகள் அப்துல்லாவை கட்டிக் கொண்டு உற்சாக கூச்சலிட்டன.'எங்களுக்கு ஒரு வயதான தந்தையை பரிசளித்த இறைவனுக்கு நன்றி! நன்றி!'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X