சென்னை : ''முறைகேடாக யாருடைய தொலைபேசி உரையாடலையும் ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கும், மத்திய அரசுக்கும் கிடையாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. நாட்டில், சில அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய அரசு ஒட்டு கேட்பதாக, காங்., தேவையில்லாத சர்ச்சையை எடுத்து வைத்துள்ளது. இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பா.ஜ.,வின் கடமை.காங்., ஆட்சியின் போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, 9,000 தொலைபேசி பதிவுகள் கேட்கப்படுவதாகவும், 5,000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் படிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையில், தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்களில், 12 பேர் எஸ்.சி., சமூகத்தையும், 8 பேர் எஸ்.டி., சமூகத்தையும் சேர்ந்தவர்கள்; 11 பேர் பெண்கள். அவர்களை, பார்லிமென்டில் அறிமுகப்படுத்த கூட, எதிர் கட்சிகள் அனுமதிக்கவில்லை. எதிர் கட்சிகளின் செயலை, பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதியை சந்தித்து, சட்டசபை நுாற்றாண்டு விழாவுக்கு அழைத்திருப்பது நெகிழ்ச்சியான விஷயம். இஸ்லாமியர்களுக்கு, தமிழக பா.ஜ., சார்பில், பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்கிறது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.