சில வரி செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜூலை 20, 2021
Share
மூவர் பலிக்கு காரணமானவர் கைதுதிருநின்றவூர்: திருநின்றவூர், நடுகுத்தகையைச் சேர்ந்தவர் ரமேஷ், 33. வழக்கம்போல் 18ம் தேதி, குடிக்க பணம் கேட்டு மனைவி கவுரியுடன், 24, தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தியடைந்த கவுரி, குழந்தைகளோடு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு துாண்டியதாக ரமேஷை நேற்று போலீசார் கைது செய்தனர்.தீ விபத்தில் மேலும் ஒருவர் பலிஜாம்பஜார்:

மூவர் பலிக்கு காரணமானவர் கைது

திருநின்றவூர்: திருநின்றவூர், நடுகுத்தகையைச் சேர்ந்தவர் ரமேஷ், 33. வழக்கம்போல் 18ம் தேதி, குடிக்க பணம் கேட்டு மனைவி கவுரியுடன், 24, தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தியடைந்த கவுரி, குழந்தைகளோடு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு துாண்டியதாக ரமேஷை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஜாம்பஜார்: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் 58, என்பவரது வீட்டில், 15ம் தேதி 'காஸ்' கசிவால் தீவிபத்து ஏற்பட்டது.இதில், அப்துல் ரஹீம் அவரது மனைவி பாத்திமா பேகம், 52, மகன் நஹீத், 22, ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாய், மகன் நேற்று முன்தினம் இறந்த நிலையில், நேற்று காலை அப்துல் ரஹீமும் பரிதாபமாக உயிரிழந்தார்.

வியாபாரி துாக்கிட்டு தற்கொலை

கொரட்டூர்: கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே மளிகை கடை வைத்துள்ளவர் செல்வகுமார், 44. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடன்தொல்லையால் அவதிப்பட்ட செல்வகுமார் நேற்று காலை கடைக்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிறந்தநாள் கொண்டாடியோர் கைது

மெரினா: கைலாசபுரம், துலுக்காணத்தம்மன் கோவில் அருகே பட்டாக்கத்தியால் 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய, தனியார் வங்கி ஊழியரான பரந்தாமன் உட்பட ஆறு பேரை, மெரினா போலீசார் கைது செய்தனர்.

கால்வாயில் பாய்ந்த கார்

புழல்: புத்தகரம், வானவன் நகரைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ், 59. நேற்று மாலை தன் ஹூண்டாய் காரை, புத்தகரம், அணுகு சாலையில் ஓட்ட பழகியபோது கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி ஆழமுள்ள உபரிநீர் கால்வாய்க்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அவரும், கற்று கொடுக்க வந்த அவரது நண்பர் குருசேவ், 60, என்பரும், சிறிய காயங்களுடன் தப்பினர்.

கொரோனா பரிசோதனை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனரக அலுவலக பணியாளர்ளுக்கு, மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றை, மாநகராட்சி துணை கமிஷனர் டாக்டர் மனிஷ், நேற்று ஆய்வு செய்தார்.

வாலிபரை தாக்கியோருக்கு வலை

தாம்பரம்: பெருங்களத்துார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் புவனேஷ், 22. பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரை 18ம் தேதி மூவர் சரமாரியாக தாக்கி தப்பினர். விசாரணையில் புவனேஷ், போதை தரும் சில மாத்திரைகளை விற்றதும், விலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டது தெரிந்தது.

மொபைல் போன் பறிப்பு

சென்னை: தாம்பரத்தைச் சேர்ந்தவர் மிக்தாத் அகமது, 26. இவர், பெரியமேடில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர், இவரது மொபைல் போனை பறித்து தப்பினார். பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

அபிராமபுரம்: அபிராமபுரம் போலீசார், 15ம் தேதி இரவு, சந்தேகத்திற்கு இடமாக மூவரை பிடித்து விசாரித்தனர். திடீரென மூவரும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பினர். விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், 24, ராஜு, கார்த்திகேயன் ஆகிய மூவர் என தெரிந்தது. நேற்று ரமேஷை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடுகின்றனர்.

திருடர்கள் இருவர் பிடிபட்டனர்

சூளைமேடு: சூளைமேடு, பெரியார் பாதையில் மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளவர் விஜயகுமார், 25. கடந்த 10ம் தேதி அவரது கடையில் இருந்து, ஸ்மார்ட் வாட்ச்கள், ஒலிப்பெருக்கி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சூளைமேடு போலீசார், ரிஷிகேஷ், 22, அந்தோணிராஜ், 19 ஆகிய இருவரை கைது செய்தனர்.

வணிகர் சங்க பேரமைப்பு புகார்

சென்னை: கடை உடைப்பு, மாமூல் வசூலிப்பு என, அட்டூழியம் செய்து வரும் போதை ஆசாமிகள், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார்.

பெண் துாக்கிட்டு தற்கொலை

சென்னை: அயனாவரம், கே.எம்.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலா, 30; இவரது மனைவி அமிர்தவல்லி, 26. தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். தனிக்குடித்தனம் செல்ல கணவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை பாலா மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அமிர்தவல்லி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் மோதல்

திரு.வி.க.நகர்: பெரம்பூர், நீலாந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா, 20, குடும்ப தகராறில் விஷம் குடித்ததில், 17ம் தேதி இறந்தார். நேற்று, இறுதி ஊர்வலம் நடந்தது. இதில், பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், 21, என்பவர் பங்கேற்றார். அவரை, தேவராஜ் என்பவர் கத்தியால் வெட்டினார். கார்த்திக்கும் திருப்பி வெட்டினார். தேவராஜின் உறவினர்கள் கார்த்திக்கை தாக்கினர். இதுதொடர்பாக, தேவராஜ், கார்த்திக் உள்ளிட்ட ஐவரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.87.50 லட்சம் மோசடி

சென்னை: தனியார் வங்கி முகவரான ஆல்வின் ஞானதுரையிடம் 87.50 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, பணம் கொடுக்கல் வாங்கல் புரோக்கர்களாக செயல்பட்ட, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசன்காதர், 41, நேதாஜி நகரைச் சேர்ந்த பாலன், 41, துாத்துக்குடியைச் சேர்ந்த வேலாயுதம், 55, ஆகிய மூவரை கைது செய்த போலீசார், 12.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பாடகி மகளுக்கு தொல்லை

சாலிகிராமம்: சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா பின்னணி பாடகியின், 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பாதிரியார் ஹென்றி, 38, உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டாளி ராஜேந்திரன் என்பவரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X