அவிநாசி: பனியன், உள்ளாடை தையல் நிறுவன உரிமையாளர்களுக்கு, ஏற்படும் இழப்பை தவிர்க்க, தொழில் பாதுகாப்புக்குழு அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.அவிநாசி, சேவூர் சுற்று வட்டார பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் பெரிய கம்பெனிகளில் இருந்து துணி வாங்கி, பனியன் உள்ளிட்ட உள்ளாடைகளை தைத்து, வழங்குகின்றனர்.
இப்பணிக்கென, தையல் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களை பணியமர்த்துகின்றனர். இத்தொழில் மூலம், நுாற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில் மேம்பாடு குறித்து, பனியன், உள்ளாடை தையல் தொழில் உரிமையாளர்களின் கூட்டமைப்பு கூட்டம், சேவூரில் நடந்தது.இதில், ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, ஜாப் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:பனியன் உள்ளிட்ட உள்ளாடை ஜாப் ஒர்க் நிறுவன உரிமையாளர்களிடம் தையல் பணிக்காக, பலரும் சேருகின்றனர்.
தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. பல தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள், குறைந்தபட்சம், 10 ஆயிரம் முதல், அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை, உள்ளாடை தையல் தொழில் உரிமையாளர்களிடம் இருந்து முன்பணம் பெற்று கொள்கின்றனர். அந்த தொகை, அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள், ஏற்கனவே, முன்பணம் வாங்கிய நிறுவனத்தில் இருந்து, கூடுதலாக முன்பணம் கொடுக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர்.இதனால், ஏற்கனவே, முன்பணம் வாங்கிய உரிமையாளர்களிடம், தொகையை திரும்ப வழங்குவதுமில்லை. இதனால், உரிமையாளர்கள் பலர் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான பிரச்னை குறித்து, பல புகார்கள், போலீஸ் ஸ்டேஷன் வரையும் சென்றுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவும், தொழிலின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சில விதிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது.அதற்காக தான், கூட்டமைப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. விரைவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து, ஜாப் ஒர்க் தையல் தொழிலை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பெரும்பாலான தொழிலாளர்கள், ஏற்கனவே, முன்பணம் வாங்கிய நிறுவனத்தில் இருந்து, கூடுதலாக முன்பணம் கொடுக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். இதனால், ஏற்கனவே, முன்பணம் வாங்கிய உரிமையாளர்களிடம், தொகையை திரும்ப வழங்குவதுமில்லை.