பொது செய்தி

தமிழ்நாடு

புவிசார் குறியீடு பெறப்போகும் அம்பையின் 'சொப்பு சாமான்கள்'... குழந்தைகளை கவரும் கண்கவர் 'மினியேச்சர் கிச்சன் செட்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை, : சோறாக்கு… குழம்பு வை… இந்தா அப்பளம்.. கொஞ்சம் கடிச்சுக்கோ என்று மழலைகள் கூடி விளையாடும் விளையாட்டில் சொப்பு சாமான்கள் தவறாமல் இடம்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் அதன் பாரம்பரியத்திற்காக புவிசார் குறியீடுக்கு அனுப்பப்பட்டுள்ளது.'ஆப்'களின் உலகத்தில் இருந்தாலும் கண்ணைக் கவரும் வண்ணங்களில்

மதுரை, : சோறாக்கு… குழம்பு வை… இந்தா அப்பளம்.. கொஞ்சம் கடிச்சுக்கோ என்று மழலைகள் கூடி விளையாடும் விளையாட்டில் சொப்பு சாமான்கள் தவறாமல் இடம்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் அதன் பாரம்பரியத்திற்காக புவிசார் குறியீடுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
'ஆப்'களின் உலகத்தில் இருந்தாலும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் மரத்தால் இழைக்கப்பட்ட சின்னஞ்சிறு சமையலறை பாத்திரங்களுக்கு மழலைகளின் உலகத்தில் எப்போதும் இடம் உண்டு. நம்மிடம் மறந்து போன மறைந்து போன ஆட்டு உரல், அம்மிக்கல், திருவைக்கல் போன்ற கருவிகள் இன்றளவும் அம்பாசமுத்திரத்தின் சொப்பு சாமானில் இடம்பெறுவது பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.

18ம் நுாற்றாண்டிலிருந்து கடைசல் என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தின் அம்பையைச் சுற்றியுள்ள வாகைகுளம், மன்னார் கோவில், கல்லிடைகுறிச்சி, பாபநாசம் பகுதிகளில் சொப்பு சாமான்கள் தயாரிக்கப்படுகிறது.1946ல் வெளியிடப்பட்ட 'காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா' என்ற ஆங்கில புத்தகத்தில் மர விளையாட்டு சாமான்கள் தயாரிக்கும் இடங்களில் அம்பாசமுத்திரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல 1947 ல் வெளியான 'ரூரல் ப்ராப்ளம்ஸ் ஆப் மெட்ராஸ்' என்ற புத்தகத்தில் நெல்லையின் அம்பாசமுத்திரம், மதுரையின் ஐராவதநல்லுார் என்ற இடமும் சொப்பு சாமான் தயாரிப்புக்கு பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரக்கட்டைகள், இயற்கை நிறமிகள், லாக் ரெசின், தாழம்பூ இலைகள் தான் முக்கியமான தயாரிப்பு பொருட்கள். ஆரம்பகாலத்தில் மஞ்சள் கடம்பு, தேக்கு, ரோஸ்வுட் மரக்கட்டைகளில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மஞ்சள் கடம்ப மரங்கள் நமது பாரம்பரியத் தோடு தொடர்புடையது என்றாலும் இம்மரங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. தற்போது நெல்லை, புதுக்கோட்டையில் கிடைக்கும் ரப்பர் மரம் மற்றும் யூக்காலிப்டஸ் மரக்கட்டை களில் தயாரிக்கப்படுகின்றன. மரத்தண்டு வெண்மையாக இருப்பதாலும் கடைவதற்கு எளிதாக இருப்பதாலும் இவற்றை வெட்டி 6 மாதங்களுக்கு முன்பே காயவைத்து விடுகின்றனர். ஓரடி நீள கட்டையாக வெட்டி இழைக்கின்றனர்.

லாக் என்ற பொருளோடு காய்கறி நிறமிகள் மற்றும் உணவுக்கான நிறங்களால் வண்ணம் தீட்டப்படுவதால் குழந்தைகள் வாயில் வைத்து சுவைத்தால் கூட கெடுதல் இல்லாதவை. நிறமேற்றிய பின் தாழம்பூ இலையால் பாலீஷ் செய்யப்படுகிறது. தாமிரபரணி கரையில் விளையும் தாழம்பூ இலைகள் இதற்காகவே பாதுகாக்கப்படுகின்றன. இந்த மரச்சாமான்கள் நீண்ட நாட்கள் உழைக்கும், எளிதில் உடையாதவை. விளையாடுவதற்கு பாதுகாப்பானவை. சொப்பு சாமான்கள் மட்டுமின்றி மூன்று சக்கர நடைவண்டி, குதிரைவண்டி, தவழும் குழந்தைகளுக்கான சக்கர வண்டி, ஏரோபிளேன், ரயில் இன்ஜின், நவீன இயந்திர பொம்மைகளும் பூஜையறை செட்களும் தயாரிக்கப்படுகின்றன.

மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள மதுரை அக்ரிபிசினஸ் இன்குபேஷன் அமைப்பின் மூலம் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அமைப்பின் சி.இ.ஓ., சிவக்குமார் கூறுகையில், ''நபார்டு வங்கி, எம்.எஸ்.எம்.இ., நிறுவனம் இணைந்து தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு உதவுகிறோம். எங்கள் அமைப்பின் மூலம் கம்பம் திராட்சை, விளாச்சேரி பொம்மை, மதுரை மரிக்கொழுந்து, ஆத்துார் வெற்றிலை, கன்னியாகுமரி மட்டி வாழை, துாத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்துள்ளோம். சொப்பு சாமானை அடுத்து இன்னும் ஏழு பொருட்கள் பட்டியலில் உள்ளன.

புவிசார் குறியீடு பெற்றால் 'பிராண்டிங்' கிடைத்துவிடும். அதன் மூலம் விற்பனை வாய்ப்பு எளிதாகும். வேறு யாரும் இந்த பெயரில் சொப்பு சாமான்கள் தயாரிக்க முடியாது'' என்றார். அம்பாசமுத்திரம் பரணி மரவர்ண கடைசல் தொழிலாளர்கள் நலச் சங்க துணைத்தலைவர் சரவணன் கூறியதாவது: நெல்லையில் 120 பட்டறைகள் மூலம் 300 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா முதல், 2ம் அலையில் தொழிலாளர்கள் நிறைய பேர் வெளியேறிவிட்டனர். மரத்தை கடைந்து செதுக்குவதற்கு கைதேர்ந்த தொழிலாளர்கள் தேவை. ஒரு நபர் 8 மணி நேரத்தில் 15 செட்கள் தயாரிக்கலாம்.

அதை ஓலைப்பெட்டியில் வைத்து தருவோம். மூன்று அளவுகளில் ரூ.120, ரூ.150, ரூ.300க்கு சுற்றுலா தலங்களில் உள்ள கடைக்காரர்களிடம் விற்கிறோம். ஒரு செட்டில் 32 வகை சமையலறை பொருட்கள் இருக்கும். அந்த காலத்தில் சொப்பு சாமானில் உள்ள பொருட்களை பட்டியலிட்டு தான் சீர் வரிசை பொருட்களே வாங்குவர்.1978ல் அரசே சொப்பு சாமான்கள் தயாரிக்க பயிற்சி தந்தது. நான் அங்கு பயிற்சி பெற்று தான் தொழில் செய்கிறேன். இப்போதும் அதுபோன்று அரசு பயிற்சி தந்தால் நிறைய இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபடலாம்.

பாரம்பரியத் தொழில் என்பதால் இதை தொடங்குவதற்கு அரசு மானியம் தரவேண்டும். விற்பனை செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு ஸ்டால்களில் எங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த சொப்பு சாமான்கள் தயாரிப்பு தொடரும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X