கோவையில் 200 அரசு டவுன்பஸ்களில்... விதிமீறலின் நிறம் சிகப்பு! பெண்களுக்கு இலவச பயணம் மறுப்பு!| Dinamalar

கோவையில் 200 அரசு டவுன்பஸ்களில்... விதிமீறலின் நிறம் சிகப்பு! பெண்களுக்கு இலவச பயணம் மறுப்பு!

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (3) | |
கோவையில் இயக்கப்படும், 200 அரசு டவுன்பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் மறுக்கப்படுவதோடு, மற்ற பயணிகளிடம் அதிகக்கட்டணம் வாங்கும் விதிமீறல் தொடர்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை நகரில் 640 டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 200 பஸ்கள் டீலக்ஸ் பஸ் என்றும், 440 பஸ்கள் சாதாரண பஸ்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.டீலக்ஸ் பஸ்களில் விதிகளை மீறி,
கோவையில் 200 அரசு டவுன்பஸ்களில்... விதிமீறலின் நிறம் சிகப்பு! பெண்களுக்கு இலவச பயணம் மறுப்பு!

கோவையில் இயக்கப்படும், 200 அரசு டவுன்பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் மறுக்கப்படுவதோடு, மற்ற பயணிகளிடம் அதிகக்கட்டணம் வாங்கும் விதிமீறல் தொடர்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை நகரில் 640 டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 200 பஸ்கள் டீலக்ஸ் பஸ் என்றும், 440 பஸ்கள் சாதாரண பஸ்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.டீலக்ஸ் பஸ்களில் விதிகளை மீறி, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இந்த பஸ்களுக்கு சிகப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது.இதுபோன்று, கூடுதல் கட்டணம் வாங்குவதே, சட்ட விதிமீறல் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு நுகர்வோர் அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன.ஏனெனில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகக் கட்டணம் வாங்குவதற்கு மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டரிடம், அனுமதி பெற வேண்டும். ஆனால் கோவையில் அது போன்று எந்த பஸ்சுக்கும், கலெக்டர் அனுமதி தரவில்லை.
ஆட்சி மாறியும் அதே நிலை
ஆட்சி மாற்றம் நடந்த பிறகாவது, இந்த பஸ்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கட்டணம் வாங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இந்த விதிமீறலுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.இந்த விதிமீறலின் உச்சமாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, பெண்களுக்கு இலவச பயணம் என்கிற சலுகை, இந்த பஸ்களில் மறுக்கப்படுகிறது.ஊரடங்கு தளர்வுக்குப் பின், பஸ்கள் இயக்கப்படத் துவங்கிய பின்பே, அரசு போக்குவரத்துக்கழகத்தின் இந்த விதிமீறல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவையில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில், இத்தகைய டீலக்ஸ் பஸ்களே அதிகம் இயக்கப்படுவதால், அந்த வழித்தடங்களில் பயணம் செய்யும் பெண்களும், அனைத்து மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.உதாரணமாக, காந்திபுரம்-மருதமலை, உக்கடம்-சோமனுார் இடையே இயக்கப்படும் டவுன்பஸ்களில் பெரும்பாலானவை, டீலக்ஸ் பஸ்களாகவே இருப்பதாக பயணிகள் குமுறுகின்றனர்.

அபராதம் விதிப்புஇவ்வாறு கூடுதல் கட்டணத்துக்கு, இயக்கப்படும் டவுன்பஸ்களின் மீது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால், சார்ஜ் செய்யப்படுகிறது. கடந்த ஏழாம் தேதியன்று, ஒரே நாளில் 17 பஸ்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது.கடந்த பத்தாண்டுகளில், கோவையில் மட்டும் 2 ஆயிரம் அரசு பஸ்கள் அதிகக் கட்டணம் வாங்கியதற்காக, ஆர்.டி.ஓ.,க்களால் சார்ஜ் செய்யப்பட்டு, கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அது, அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

விதிமீறல் இல்லாதபட்சத்தில், அந்த அபராதத்தொகையை, செலுத்தியிருக்கவே தேவையில்லை.ஆனால் மிக மிக குறைவான அபராதம் விதிக்கப்படுவதால், அதைச் செலுத்தி விட்டு, மறுபடியும் அந்த விதிமீறலைத் தொடர்வது வாடிக்கையாகவுள்ளது.இதேபோன்று, கோவையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்படும் மொபசல் பஸ்களிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகவுள்ளது.
அரசுக்கு அவப்பெயர்
ஆட்சி மாறிய பின்னும், இந்த விதிமீறல் தொடர்வது, மக்களிடம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இலவச பயணம் மறுக்கப்படுவது, கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.பஸ்சின் நிறத்தை மட்டும் மாற்றிவிட்டு, அதற்கு டீலக்ஸ் பஸ் என்று பெயர் சூட்டி, இப்படி அதிகக் கட்டணம் வசூலிப்பது, எந்த விதத்திலும் நியாயமில்லை என்று மக்கள் குமுறுகின்றனர்.அ.தி.மு.க., அரசு மீது, ஆயிரம் புகார்களை அடுக்கிய முதல்வர்தான், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!-நமது நிருபர்-


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X