சின்னசேலம் : சின்னசேலத்தில் நடைபெறும் வாரசந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சந்தையில் விடப்படுவதால் சுகாதாரமற்ற நிலையில் வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் அவலம் உள்ளது.
சின்னசேலம் நகரபகுதி பாண்டியன்குப்பம் செல்லும் சாலை அருகே 60 ஆண்டுகளுக்கு முன், மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வார சந்தை துவங்கப்பட்டது. வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தைக்கு சுற்றியுள்ள தொட்டியம், எலவடி, கூகையூர், கனியாமூர், தகரை உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இங்கு காய்கறி, பழங்கள், மளிகை மட்டுமின்றி, ஆடு, மாடுகள் விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு 300 கடைகளின் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், சந்தை வளாகத்தில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி என எதுவும் இல்லை. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சந்தை வளாகத்தில் செல்வதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இதனால், சுகாதார மற்ற முறையில் வியாபாரிகள் விற்பனை செய்வதும், அதனை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் அவலமும் உள்ளது.
மேலும், சந்தை வளாகத்தில் போடப்பட்ட சிமென்ட் ஷீட்டுகளும், நாளடைவில் உடைந்து தற்போது, திறந்தவெளி கூடாரமாக புதர்மண்டியுள்ளது.இதில் ஒரு சில வியாபாரிகள் தார்ப்பாய் கூடாரத்திலும், மற்றும் சிலர் திறந்தவெளியில், வெயிலிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் சந்தைக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால், காய்கறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.கொரோனா 2வது அலையால் தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், இதனை நம்பியுள்ள வியாபாரிகள் பலர் வருவாய் இழந்துள்ளனர்.எனவே வார சந்தை வளாகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, சந்தையை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE