செய்தி சில வரிகளில்..| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..

Added : ஜூலை 21, 2021
Share
தே.மு.தி.க., ஆலோசனைக்கூட்டம்அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தே.மு.தி.க., கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பொருளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் சேவைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு

தே.மு.தி.க., ஆலோசனைக்கூட்டம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தே.மு.தி.க., கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பொருளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் சேவைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோபி, அரசமணி, கதிரவன், சாதிக்பாஷா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

போலீசாருக்கு பாராட்டு

விழுப்புரம்: எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். இதில், திண்டிவனம் சப் டிவிஷனில் பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்தும், கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து மெச்ச தகுந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

குருவணக்க நிகழ்ச்சி

வானுார்: விழுப்புரம் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் தி.கூட்ரோடு காந்தி மேல்நிலைப் பள்ளியில் நடந்த குரு வணக்க நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் இளங்கோ வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயராமன் தலைமையுரையாற்றினார். அகில இந்திய சேவா இயக்க ஒருங்கிணைப்பாளர் மாதாஜி சுத்தவித்யானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார். தேசிய ஆசிரியர் சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை பூங்குழலி தொகுத்து வழங்கினார்.
தேசிய ஆசிரியர் சங்க திட்டப் பணியாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, புதுச்சேரி லே பானியன் தெபெக் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

செயற்குழுக் கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: அரசூரில் நடந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு, கோட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவில் அனைத்து கிளை கமிட்டிகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சதிஷ் நன்றி கூறினார்.

மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

விக்கிரவாண்டி: பொன்னங்குப்பம், கப்பியாம்புலியூர், வடகுச்சிபாளையம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பாப்பனப்பட்டு, ஆவுடையார்பட்டு, வி.சாத்தனுார், கொட்டியாம்பூண்டி ஆகிய இடங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார்.தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் சார்லின், வி.ஏ.ஓ., சரத்யாதவ், தி.மு.க., மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி, எத்திராசன், நிர்வாகிகள் வெற்றிவேல், மோகன், புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பா.ஜ., செயற்குழுக் கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் நடந்த பா.ஜ., ஒன்றிய செயற்குழுக் கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் முருகன், வாசுகி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும். ஏழைகளுக்கு ஆடு, மாடு கொட்டகை அமைத்துத் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் மல்லிகா நன்றி கூறினார்

பா.ம.க., கொடியேற்று விழா

அவலுார்பேட்டை: ஈயகுணம், துறிஞ்சிப்பூண்டி கிராமங்களில் பா.ம.க., 33ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் துரை, துணை அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் தீரன் கொடியேற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகன், அன்பழகன், துணைச் செயலாளர் ஜெயக்குமார், சக்திராஜன், தாண்டவராயன், சிங்காரவேலு, முனுசாமி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்: தமிழ்ப் படைப்பாளர் சங்கத்தின் சார்பில் கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் செம்பியன் தலைமை தாங்கினார். சுப்புராயன், ஆசிரியர் லட்சுமிபதி, கதிர்வேல், சவுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: உழவர் தொழிலாளர் பேரியக்கம் மற்றும் தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அம்பேத்கர், சவுந்திரராசன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பதமிழர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். கைக்கான் வளைவு திட்டத்தைக் கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திணிக்ககக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: அரசு மாதிரி மகளிர் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். செயலாளர் கிரிராசு முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சதிஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கென்னடி, பள்ளியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கலெக்டர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன், தலைவர் மாரியப்பன், இளைஞரணி செயலாளர் மூனாப் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாநில செயலாளர் ஜெகதீசபாண்டியன் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி: க.செல்லம்பட்டு, எடுத்தவாய்நத்தம் ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு கேட்டு 21 பேரும், ஆட்டு கொட்டகை கேட்டு 7 பேரும், முதியோர் உதவிதொகை கேட்டு 8 பேரும், தையல்மிஷன் கேட்டு 10 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை. பலர் கணவனை இழந்தும், பிள்ளைகளின் ஆதரவின்றியும் உள்ளோம். எனவே அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டிவனம்: தேசிய மேல்நிலைப் பள்ளியில், அனைத்து வியாபாரிகள் சங்கம், அரசு பொது சுகாதாரத் துறை, நகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு, வியாபாரிகள் சங்கத் தலைவர் ராம்டெக்ஸ் வெங்கடேசன் வரவேற்றார். பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் முன்னிலை வகித்தார். திண்டிவனம் சப் கலெக்டர் அமித், முகாமை துவக்கி வைத்தார். பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராம் லால் ரமேஷ், காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், சப் கலெக்டரிடம், திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X