சென்னை: தமிழகத்தை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவாக்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ‛இந்த இலக்கினை மக்கள் நீதி மய்ய்ம தான் முதலில் முன்வைத்தது,' என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில்துறை சார்பில் நேற்று (ஜூலை 20) 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் பேசுகையில், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழகத்தை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்," எனப் பேசியிருந்தார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், 'இதனை தங்கள் கட்சி தான் முதலில் முன்வைத்தது,' என கூறியுள்ளார். கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு:
தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021