மும்பை: ‛‛மஹாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்,'' என்று அம்மாநில காங்., தலைவர் நானா படோல் தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான ‛மகா விகாஸ் அகாதி' கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். இதற்கிடையில் அரசுக்கும், கூட்டணிக்கும் எதிராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தொடர்ந்து பேசி வந்தார். இது கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அழைப்பின்பேரில், மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே டில்லி சென்று சந்தித்தார். சில மணி நேரங்கள் நடந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மஹாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நானா பட்டோலே கூறியதாவது: எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதித்தோம். மஹாராஷ்டிராவில் முதன்மை கட்சியாக காங்கிரசை மாற்ற பணிகளை முடுக்கிவிடவுள்ளோம். அதற்காக மாஸ்டர் பிளான் ஒன்றை ராகு ல்தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தலில், கட்சியின் உயர்மட்ட குழு தனித்து போட்டியா, கூட்டணி அமைத்து போட்டியா என்பதை முடிவு செய்யும். தற்போது நடைபெறவுள்ள மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE