புதுடில்லி:கையால் துாக்கிச் சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கையால் துாக்கிச் சென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை அது வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
இது பற்றி டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறுகையில், 'இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில், இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த ஏவுகணை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இந்த வகை ஏவுகணைகளை போர்க் காலங்களில் கையால் துாக்கிச் சென்று, இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும். இது, தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு வலு சேர்த்துள்ளது' என்றனர்.

இதே போல், தரையிலிருந்து பாய்ந்து சென்று, விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 'ஆகாஷ்' ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள தளத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.