லண்டன் : 'இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால், நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது' என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் இருந்து, 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர். பின், அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றனர்.
![]()
|
இந்த பணமோசடி குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்து வருகின்றன. பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிய நிரவ் மோடி, அங்கு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை, நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல், கடந்த ஏப்ரலில் அனுமதி அளித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக, நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.பின், நிரவ் மோடி, மீண்டும் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நேற்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் கூறியதாவது:
நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து, நிரவ் மோடி, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும், அவர் முறையாக பெறவில்லை.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால், அவர் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்படலாம். இதனால், அவர் தற்கொலை செய்துகொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement