கூக்கால் ஏரி பகுதியை ஒட்டி தனியார் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானங்களை ஏற்படுத்துவதாக ஆர்.டி.ஓ., முருகேசனுக்கு புகார் வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்ததில் அரசு நிலம் என தெரிந்தது. தொடர்ந்து, அரசு நிலம் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் நிறுவினர். இந்த நடவடிக்கை ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர, வில்பட்டி, பூம்பாறை, கொடைக்கானல், வடகவுஞ்சி, அடுக்கம், மேல் மலைப்பகுதியை சுற்றி ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முன் இருந்த ஆர்.டி.ஓ., சுரேந்திரன் ஏராளமான போலி பட்டாக்களை ரத்து செய்தார். தற்போது புதிய ஆர்.டி.ஓ.,விடம் நில மோசடி குறித்து புகார்கள் குவிகின்றன.
இந்நிலையில் மாநில நில நிர்வாக பிரிவு கொடைக்கானலில் நில மோசடி குறித்து ஆவணங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அரசு இப்பிரச்னையில் துரிதம் காட்டும் பட்சத்தில் ஏராளமான அரசு நிலங்கள் மீட்கப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும்.