நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?

Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (5)
Share
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், 55 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது, 60 சதவீதத்தைத் தொடக்கூடும்' என்று, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.இந்தச் செய்தி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரங்கள், தொலைநோக்குப் பார்வை ஆகியவை,
 நவீன முதியோர் இல்லங்களாக கிராமங்கள் மாறி விடுமோ?

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், 55 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது, 60 சதவீதத்தைத் தொடக்கூடும்' என்று, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.இந்தச் செய்தி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரங்கள், தொலைநோக்குப் பார்வை ஆகியவை, எப்படி அமையப் போகின்றனவோ என்ற, கவலை ஒரு பக்கம். இன்னொரு பக்கம், வேலைவாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை எதிர்நோக்கி, இளைஞர்கள் கிராமங்களை விட்டு, நகரங்களுக்கு நகர்ந்து விட்டால், அப்புறம், கிராமங்கள், நவீன முதியோர் இல்லங்களாக மாறி விடுமோ என்ற கவலை.ஏற்கனவே, சீன நாட்டில் இப்படித்தான் நடந்திருக்கிறது என்ற முன்னுதாரணமும், நம் முன் இருக்கிறது. நம்முடைய கிராமங்களுக்கு, என்ன ஆகப் போகிறதோ?

புதுச்சேரிப் பல்கலை, மானிடவியல் பேராசிரியர் ஆ.செல்லபெருமாள் கூறியதாவது:தமிழகம் மட்டுமல்ல, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களும் மிக வேகமாக நகரமயமாகி வருகின்றன. நமது அரசுகள், கிராமங்களை விட, நகரங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.திட்டங்கள் வகுத்து, நிதி ஆதாரங்களை உருவாக்கி, மேம்பாலங்கள் முதற்கொண்டு பல்வேறு பணிகளை நிறைவேற்றி வந்துள்ளன என்பது, உண்மை தான். அதற்காக, எதிர்காலத்தில், கிராமங்கள், முதியோர் இல்லங்களாக மாறி விடும் என்று, நினைக்க வேண்டியதில்லை.

இங்கே வளர்ச்சி, 'மாடல்' வித்தியாசமானது. நம் கிராமத்தில் சேமிப்பு பழக்கம் அதிகம். அவர்கள் சமுதாயமாக, அடுத்தவர்களோடு ஒருங்கிணைந்து வளர்வதில்லை. மாறாக, தனித்தனியாக, தம்மளவில் முன்னேற்றத்துக்காக உழைக்கின்றனர்.இன்றைக்கு எண்ணற்ற பெரிய தொழில்களும், கிராமங்களை நோக்கி, நகரத் துவங்கியுள்ளன. பொறியியல் கல்லுாரிகள், கலைக் கல்லுாரிகள் போன்றவையும், விசாலமான இடத் தேவைக்காக, கிராமங்களுக்கு அருகே சென்று விட்டன.

முன்னர், நகரங்கள் விரிய விரிய, பக்கத்தில் உள்ள ஊர்கள் எல்லாம், 'புறநகர்' பகுதிகளாக உருமாற்றம் அடைந்தன. அதேபோல், இப்போது, கிராமங்கள் வளரத் துவங்கியுள்ளன. அதன் பக்கத்தில் உள்ள பகுதிகள் எல்லாம் கிராமத்தின் நீட்சியாக வளர்ந்து வருகின்றன. இதற்கு, 'ரூர் அர்பன்' என்ற அர்த்தத்தில், 'புற கிராமங்களாக' உருமாற்றம் பெற்று வருகின்றன.முந்தைய இரண்டு தலைமுறை இளைஞர்கள், வேலை வாய்ப்புகளுக்காக, நகரங்களை நோக்கி நகர்ந்தனர்.

ஆனால், தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள், நகர்வதில்லை. அவர்கள் தங்கள் கிராமங்களையே, தொழிலுக்கு உகந்த பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.இவர்களோடு சேர்ந்து, இரண்டு தரப்பினர் கிராமங்களுக்குச் செல்கின்றனர். செல்வந்தர்களும், உயர் பதவியில் இருந்த அதிகாரிகளும், தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்காகச் செல்கின்றனர். இவர்கள் பெரிய அளவில் இல்லை.

ஆனால், 15, 20 ஆண்டுகளாக, ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிவிட்டு, புதிய வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள், மீண்டும் கிராமங்களை நோக்கி வருகின்றனர். இயற்கை விவசாயம் முதற்கொண்டு, பல்வேறு புதிய உத்திகளை, அங்கே செயல்படுத்தி பார்க்க விரும்புகின்றனர்.இவர்களாலும், நம் கிராமங்களில் புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்பது, உண்மை தான். கிராமங்கள் புதிய முகமும், வடிவமும் பெற்று வருகின்றன. அவை கைவிடப்பட்டவையாக, இனியும் கருத வேண்டியதில்லை.இவ்வாறு, செல்லபெருமாள் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X