பொது செய்தி

இந்தியா

லஞ்சத்தில் ஊறும் நகர ஊரமைப்புத்துறை: திட்டமிடுதல் மறந்து திட்ட அனுமதிக்கு வசூல்

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நகரங்களை திட்டமிட்டு மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நகர ஊரமைப்புத்துறையை சீரமைத்து, லஞ்சமும், தாமதமுமின்றி திட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.நகரங்களில் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கவும், விதிகளுக்கு உட்பட்டு, காலத்திற்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்கி நகரங்களை முறையாக வடிவமைக்கவும் தோற்றுவிக்கப்பட்ட துறைதான், நகர
லஞ்சம், நகர ஊரமைப்புத்துறை,  திட்டமிடுதல், திட்டஅனுமதி, வசூல்

நகரங்களை திட்டமிட்டு மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நகர ஊரமைப்புத்துறையை சீரமைத்து, லஞ்சமும், தாமதமுமின்றி திட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நகரங்களில் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கவும், விதிகளுக்கு உட்பட்டு, காலத்திற்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்கி நகரங்களை முறையாக வடிவமைக்கவும் தோற்றுவிக்கப்பட்ட துறைதான், நகர ஊரமைப்புத்துறை. இந்தத் துறை, இப்போது கட்டடங்கள் மற்றும் லே-அவுட்களுக்கு திட்ட அனுமதி வழங்குவதில், வசூல் வேட்டை நடத்துவதையே பிரதானப் பணியாக கொண்டுள்ளது.

ஒவ்வொரு நகரத்துக்கும் அதன் வளர்ச்சியின் அடிப்படையில், மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அது திருத்தப்பட வேண்டும். நகர ஊரமைப்புச் சட்டம் - 1971, இதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் என்பதே இல்லை.


மாஸ்டர் பிளானா... அப்படின்னா?


கோவையில் தற்போது நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான், 1994ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. 27 ஆண்டுகளாக மாஸ்டர் பிளான் புதுப்பிக்கப்படவில்லை. நகர ஊரமைப்புச் சட்டம் - 1971, தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் வளர்ச்சிக்கேற்ப விதிகள் மாற்றத்துடன் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். சில நகரங்களில் மாஸ்டர் பிளானைப் புதுப்பிப்பதற்கு, 2006-2011 தி.மு.க., ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது. கோவையில் 480 பக்கங்கள் கொண்ட மாஸ்டர் பிளான் வரைவு தயாரிக்கப்பட்டு, மக்களின் ஆட்சேபம் மற்றும் ஆலோசனையும் பெறப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் அதுவும் நடைமுறைக்கு வரவேயில்லை. மாறாக, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு, புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி, ஆலோசனை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. கள ஆய்வும், துறையில் அனுபவமுடைய அதிகாரிகளின் ஆலோசனையும் இல்லாததால், அவர்கள் கொடுத்த மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு ஒத்துப்போவதாக இல்லை. அதன்பின் அதைத் திருத்தும் பணி, மற்றொரு ஆலோசனை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனமும் பணியை முடித்துத்தரவில்லை.மொத்தத்தில், பெருநகரங்களுக்கான புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்புக்காக, துறை சார்பில் ஆறேழு கோடி ரூபாய் செலவழித்தது விரயமானது. கடந்த பத்தாண்டுகளில் நகர ஊரமைப்புத்துறை, திட்டமிடுதல் என்ற கடமையையே சுத்தமாக மறந்து விட்டது.


latest tamil newsநடந்தது வசூல் மட்டுமே!


நகர ஊரமைப்புத்துறையிடம் திட்ட அனுமதி பெற வேண்டிய கட்டடங்கள் மற்றும் லே-அவுட்களுக்கு வகைதொகையின்றி லஞ்சம் வாங்கப்பட்டது. 2006-2011 தி.மு.க., ஆட்சியில் கோப்புக்கு இவ்வளவு என்றிருந்த லஞ்சத்தை, சதுரஅடிக்கு இவ்வளவு, ஏக்கருக்கு இவ்வளவு என்று மாற்றி, ஒரு புதிய நடைமுறை உருவாக்கப்பட்டது, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில்தான். பத்தாண்டுகளில் இந்த லஞ்சத்தொகை படிப்படியாக உயர்ந்து, ஒரு சதுர அடிக்கு 125 ரூபாய் என்கிற அளவிற்கு உயர்ந்து நின்றது. இவற்றைத் தவிர்த்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் சேர்த்து, சதுரஅடிக்கு ரூ.175லிருந்து ரூ.200 வரை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு கட்டுமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இதுவே லே-அவுட் அனுமதி என்றால், ஏக்கருக்கு, 10 லட்ச ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டியுள்ளது. அதிலும் மலையிட பாதுகாப்புக் குழுமத்துக்கு (ஹாகா ஏரியா) உட்பட்ட பகுதியாக இருந்தால், இந்தத் தொகை ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாயாக உள்ளது.நகர ஊரமைப்புத்துறையில் லஞ்சம் மற்றும் தாமதத்தைக் குறைக்க, ஒற்றைச்சாளர முறையில் திட்ட அனுமதி வழங்கும் நடைமுறையைக் கொண்டு வரவேண்டுமென்று, பல்வேறு தொழில் அமைப்புகள், பொறியாளர்களுக்கான அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அது இறுதி வரை ஏற்கப்படவுமில்லை; பரிசீலிக்கப்படவுமில்லை.


அர்த்தமற்ற அரசாணைகள்!


லஞ்சம் வாங்குவது ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில், இரண்டரை ஏக்கர் பரப்பு வரையிலான லே-அவுட்களுக்கு, ரிசர்வ் சைட் விட வேண்டாம்; அதற்கான வழிகாட்டி மதிப்பை அரசுக்குச் செலுத்தினால் போதும் என்று நகர ஊரமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பல ஆணைகளும் துறையால் வெளியிடப்பட்டன. இதனால், 10 ஏக்கரை நான்காகப் பிரித்து, ரிசர்வ் சைட் விடாமலே லே-அவுட் போடும் கொடுமை நடக்கிறது.எதிர்காலத்தில், பூங்கா, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் என மக்களுக்கான பொது ஒதுக்கீட்டு இடம் எதுவுமே இல்லாமல், கான்கிரீட் காடாக நகரங்கள் மாறுவதற்கு அந்த அரசாணை வழி வகுத்தது. இதெல்லாம் போதாதென்று, நகர ஊரமைப்புத்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் நகர ஊரமைப்புத்துறை நிர்வாகத்துடன், நகரங்களின் வளர்ச்சியும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இந்தத் துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமென்று பலரும் கனவோடு காத்திருக்கின்றனர். அதற்கு மாறாக, கடந்த ஆட்சியில் வசூல்ராஜாக்களாக வலம் வந்த அதே அதிகாரிகள்தான், இப்போதும் அதே பணிகளில் தொடர்கின்றனர். முதல்வர் தர நினைக்கும் நல்லாட்சிக்கு, இது எந்த வகையிலும் உதவாது என்பது நிச்சயம்.


அனுமதி கிடைக்கும் :லஞ்சம் குறையாது!

தமிழக வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டதற்கு, ''கட்டடங்களுக்கான திட்ட அனுமதி, லே-அவுட் அங்கீகாரம் கோரும் விண்ணப்பங்களை அதிகபட்சம், 60 நாட்களுக்குள், அதாவது 45 வேலை நாட்களுக்குள் பரிசீலித்து உரிய அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ''திட்ட அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் வழங்குவதற்கான மென்பொருள் தயாரிப்பது உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் நடக்கின்றன. அது முடிந்ததும் ஒற்றைச் சாளர முறை கொண்டு வரப்படும்.'' என்றார்.ஆனால், திட்ட அனுமதிக்கான லஞ்சம் குறையுமா என்ற கேள்விக்கு அவரிடமிருந்து பதிலே வரவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202106:02:10 IST Report Abuse
ராஜா தமிழ்நாடு முழுவதும் லஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு உள்ளது.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
22-ஜூலை-202122:46:20 IST Report Abuse
m.viswanathan Yale University , Oxford University , போல லஞ்சம் வாங்குவது எப்படி என training எடுக்க எங்கேனும் University உள்ளது போலும் . இவங்க தண்டிக்க படாத வரையில் திருந்துவது கடினம்
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
22-ஜூலை-202118:38:34 IST Report Abuse
வந்தியதேவன் ///அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், பெருநகரங்களுக்கான புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்புக்காக, துறை சார்பில் ஆறேழு கோடி ரூபாய் செலவழித்தது விரயமானது//// அப்பவெல்லாம் கேக்காம.... இப்ப நீங்க கேள்வி கேட்பதைப் பார்த்தா... கிராமத்தில் சொல்லும் சொல்வழக்கு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது... “பயந்து ஓட்ற நாயைக் கண்டா... வெரட்ர நாயிக்கு குஷி வந்துடும்”...அப்படீன்னு சொல்வாங்க... அதுதான் நினைவுக்கு வருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X