மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, ஆபீசில்...ரெய்டு!| Dinamalar

'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, ஆபீசில்...ரெய்டு!

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (28) | |
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள், உறவினர்களின் வீடுகள் என, தமிழகம் முழுதும், 26 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து, 13 மணி நேரம் நடந்த சோதனையில், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு
மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, ஆபீஸ்,ரெய்டு!

அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள், உறவினர்களின் வீடுகள் என, தமிழகம் முழுதும், 26 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து, 13 மணி நேரம் நடந்த சோதனையில், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவர்னர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தரப்பட்டது.


சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் வேட்பாளராக ஊர் ஊராக சென்ற ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும்; இந்த ஸ்டாலின் விடமாட்டேன்; என்னை நம்புங்கள்' எனக்கூறி ஓட்டுக்கேட்டார்.


கந்தசாமி நியமனம்அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சி.பி.ஐ.,யில் பணியாற்றி அனுபவம் பெற்ற, டி.ஜி.பி., ரேங்கில் உள்ள கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக பணி அமர்த்தப்பட்டார்.அவரது தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை வலுப்படுத்தப்பட்டது. சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த, ஐ.ஜி., பவானீஸ்வரி; விருப்ப ஓய்வு கோரிய, டி.ஐ.ஜி., லட்சுமி மற்றும் பல ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த, 100க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டு, அந்த துறைக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது.


முதல்வர் ஸ்டாலினை, ஜூன், 26ல் கந்தசாமி சந்தித்தார். இருவரும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்தனர். அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களின் ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டன.அதன் அடிப்படையில், 'டெண்டர்' முறைகேடு, பஸ் கொள்முதல் செய்ததில் ஊழல், உதிரி பாகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் சுருட்டல் என, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
போலீஸ் தயாரித்த ஊழல் பட்டியலில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் வேலுமணி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.


அதிரடி சோதனைஇந்நிலையில், திடீரென நேற்று காலை, 6:30 மணி முதல், 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சென்னை, கரூர் வீடுகள், அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என, 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கர் வீடு; மேற்கு மாம்பலம், கோகுலம் காலனி, ராமகிருஷ்ணா புரத்தில், 'டெடி இண்டியா' என்ற நிறுவனம்; பெருங்களத்துாரில், உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு; வில்லிவாக்கம், டவர் பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில், ரவிக்குமார் என்பவரின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில், சின்ன ஆண்டாங்கோவில் ரெயின்போ சாயப்பட்டறை, அட்டை பெட்டி நிறுவனம்; ஆண்டாங்கோவிலில் உள்ள விஜயபாஸ்கரின் தம்பி சேகர் வீடு; கரூர் மில்கேட்டில் உள்ள தறி பட்டறை, அவரது உதவியாளர்கள் கார்த்தி, ரமேஷ் வீடுகள்; க.பரமத்தியில் ரெயின்போ கல்குவாரியிலும் சோதனை நடந்தது. தொடர்ந்து, 13 மணி நேரம் சோதனை நடந்தது. சின்ன ஆண்டாங்கோவிலில் விஜயபாஸ்கர் வீடு பூட்டியிருப்பதால், அங்கு சோதனை நடக்கவில்லை.

விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் கூறுகையில், 'லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், விஜயபாஸ்கர் வீட்டில் சிங்கிள் பேப்பர் கூட சிக்கவில்லை. விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம்' என்றார். இந்நிலையில், சோதனை குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், மனைவி விஜயலட்சுமியின் வீடுகள்; அவர்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் என, 26 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து சார்ந்த முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்த முதலீட்டு ஆவணங்கள், நிறுவனங்களில் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பங்காளி சண்டை காரணமா?விஜயபாஸ்கரும், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஜெ., தலைமையிலான ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, தான்தோன்றிமலை ஒன்றிய செயலராக விஜயபாஸ்கர் இருந்தார். அப்போதே, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. பின், செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டது. அவர், அ.ம.மு.க.,வுக்கு ஓட்டம் பிடித்தார்; பின், தி.மு.க.,வுக்கு தாவினார்.

செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அவரது வீடு மற்றும் சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு, இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரே காரணம் என, செந்தில் பாலாஜி தரப்பினர் குற்றம் சாட்டினர். தற்போது செந்தில் பாலாஜி கை ஓங்கி இருப்பதால், அவரது முயற்சியால், பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த சோதனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.- நமது நிருபர் குழு -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X