சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாமல், புதிய பஸ்களை வாங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அரசு கட்டடங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி, பயணிக்கும் வகையில், வசதிகளுடன் கூடிய பஸ்களை இயக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, 10 சதவீத பஸ்கள் மட்டுமே வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தற்போது, சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளது; அவற்றை மேம்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிக்கை பெற்று தெரிவிக்கிறேன்,'' என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, 'சட்டத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார். போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதலில், 10 சதவீத பஸ்களை வாங்குகிறோம். மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பஸ்சுக்கு, 58 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிதி பிரச்னை உள்ளது. இந்தியா, ஏழை நாடு' என்றார்.
உடனே, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ''ஆட்சியாளர்கள் எத்தனை பேர், ஏழைகள்; எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகளாக உள்ளனர். சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, போக்குவரத்து கழக வழக்கறிஞர், '10 சதவீதத்தில் துவங்கி, படிப்படியாக அதிகரிக்கிறோம்' என்றார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''நிலையை ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன். அதற்கு அவகாசம் வேண்டும். பொது மக்கள் பாதிக்கக் கூடாது,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச், 'மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல், பொது போக்குவரத்து சேவைக்காக புதிய பஸ்கள் வாங்கக்கூடாது' என, உத்தரவிட்டது. அரசு தரப்பில், திட்ட நடவடிக்கையை தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE