சிவகங்கை : மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை பருவகாலத்திற்கு முன்பாகவே குடிமராமத்து பணிகள் செய்து நீர்நிலைகளை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இம்மாவட்டம் வழியாக வைகை, உப்பாறு, பாலாறு, மணிமுத்தாறு, பாம்பாறு, விருசுழியாறு, சருகனியாறு ஆகியசிற்றாறுகள் ஓடுகின்றன. முல்லை பெரியாறு, வைகை மூலம் பாசனவசதிகள் பெற்று வருகின்றன.பொதுப்பணித்துறை சார்பில் 968 பாசனகண்மாய்கள், ஒன்றிய நிர்வாகத்தில் 4 ஆயிரத்து 871 கண்மாய்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சங்கிலி தொடர்கள் போல்உள்ளன. இதன் மூலம் 2.5 லட்சம் ஏக்கர்விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனால் இன்றைக்கு பல கிராமங்களில் உள்ள கண்மாய்கள் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, கால்வாய்கள் துார்ந்து போதல் போன்ற பிரச்னைகளால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை. அப்படியே வரும் நீரும் பராமரிப்பில்லா மடை, கழுங்குகள் வழியே விரயமாகிவிடுகிறது. இதனால் பருவ கால மழை நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.குடிமராமத்து திட்டம் மூலம் கண்மாய்கள் துார்வாரும் பணி நடக்கிறது.
அந்த வகையில் ஆண்டுக்கு ஊராட்சிக்கு ஒரு கண்மாய் மட்டுமே துார்வாரப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் 25க்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருந்தும், ஆண்டுக்கு ஒன்று தான் துார்வாரப்படுகிறது. இதனால் கண்மாய்கள் சிதிலமடைந்துவிடுகின்றன. குடிமராமத்து பணிகள் வேலை உறுதி திட்டத்தில் செய்வது திருப்திகரமாகஇல்லை.இயந்திரங்கள் மூலம் துார்வாரினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.
அக்.,முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கிவிடும்.அதற்குள் குடிமராமத்து பணிகளை செய்தால் மட்டுமே மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் கண்மாயில் சேகரிக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாய் குடிமராமத்து பணியை இயந்திரங்களை கொண்டு விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE