உடுமலை;உடுமலை, ருத்ரப்பா நகரில், புதிதாக நுாலகம் அமைக்க, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகில் உள்ள கலாசாரம் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக உள்ளன.அவ்வகையில் பலதரப்பட்ட புத்தகங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நுாலகங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், மூன்று நகர்ப்புற நுாலகங்கள் மட்டுமின்றி, 35 கிளை மற்றும் ஊர்ப்புற நுாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ருத்ரப்பா நகரில், புதிதாக நுாலகம் அமைக்கும் பொருட்டு, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் எழுப்பப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றும், அக்கட்டடம் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.வாசகர்கள் கூறியதாவது: குழந்தைகளுக்கு சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது, அவர்களுக்கு அறிவு சார்ந்த தேடல் அதிகரிக்கிறது. இதற்கு, நுாலகங்கள் பெரிதும் உதவுகிறது.எனவே, நுாலகம் செயல்பாட்டிற்கு, புதிய கட்டடத்தைப் பயன்பாட்டுக் கொண்டுவர வேண்டும். அப்போது, ருத்ரப்பா நகர் மட்டுமின்றி, பழனியாண்டவர்நகர், ராமசாமிநகர், டி.வி., பட்டிணம், சிவகாமிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன் அடைவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.