தஞ்சாவூர்:கும்பகோணத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்த பா.ஜ., நிர்வாகி வீட்டில் இருந்து, 12 சொகுசு கார்களையும், மூட்டை மூட்டையாக ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், 50; சுவாமிநாதன், 47. இவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வசிக்கின்றனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை வைத்துள்ளனர்.கணேஷ், பா.ஜ., கட்சியின் வர்த்தகப் பிரிவு பொறுப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களது பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்து, பொதுமக்களிடம் பணி வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜன்டுகளை நியமித்து, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதி, கணேஷ், சுவாமிநாதன் ஆகிய இருவரும், 15 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக, தஞ்சாவூர் எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணை நடத்தி, பைனான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ரீகாந்த் என்பவரை கைது செய்தனர். தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, அவர்களுக்கு சொந்தமான வீடு, பைனான்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இதில், கணேஷ் வீட்டில் இரண்டு பி.எம்.டபிள்யு., கார்கள், எட்டு டொயோட்டா உட்பட 12 சொகுசு கார்கள், மூட்டை மூட்டையாக ஆவணங்கள்,மூன்று கம்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ள கணேஷ், சுவாமிநாதன் மற்றும் இருவர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு பேர் அடங்கிய தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE