புதுடில்லி : நாடு முழுதும் அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு ஒரே சட்டம் இயற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சிக்கள் ஆகியோர் தங்கள் வழிபாட்டு தலங்களை உருவாக்கி பராமரிக்கும் உரிமைகளை பெற்றுஉள்ளனர்.
அரசியல் சாசன சட்டம்
ஆனால் ஹிந்து, ஜைனம், புத்தம் மற்றும் சீக்கியர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் வழிபாட்டு தலங்களை உருவாக்கி, பராமரிக்கும் உரிமையை வழங்கும் அரசியல் சாசன சட்டம் 26வது பிரிவுக்கு எதிரானது.
நாட்டில் உள்ள ஒன்பது லட்சம் கோவில்களில், நான்கு லட்சம் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் ஒரு தேவாலயம் அல்லது மசூதி கூட, அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தேவாலயம் மற்றும் மசூதி நிர்வாகங்கள் புரியும் தொண்டுகளுக்கு வரி வசூலிப்பது இல்லை. அதே சமயம், ஹிந்து கோவில்கள், அவற்றின் வருவாய்க்கும், தொண்டு பணிகளுக்கும் 13 - 18 சதவீதம் வரி
செலுத்துகின்றன. இந்த பாகுபாடிற்கு 1951ம் ஆண்டின் ஹிந்து அறநிலையச் சட்டமும், அதுபோல மேலும் பல சட்டங்களை அவ்வப்போது மாநில அரசுகள் இயற்றியது தான்
காரணம். இந்த சட்டங்கள் காரணமாக, 15 மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் உள்ளன.
![]()
|
விதிமுறை
எனவே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு உள்ள உரிமை போல, ஹிந்து மதத்தினருக்கும், அரசின் தலையீடின்றி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கவும், பராமரிக்கவும் உரிமை வழங்க வேண்டும்.இது தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் பாரபட்சமாக உள்ளன. எனவே அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு பொதுவான விதிமுறைகளுடன் சட்டம் இயற்ற, மத்திய அரசு அல்லது சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.