
இன்று நாடு முழுவதும் உணர்வுடனும்,உயர்வுடனும் உச்சரிக்கப்படும் பெயர் மீராபாய் சானு.
நடந்து கொண்டு இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடை கொண்டவர்களுக்கான பளுதுாக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை ஆரம்பித்துவைத்துள்ளார்.
பிரதமர் துவங்கி சாதாரண குடிமகன் வரை மீராபாய் சானுவின் இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்

மீராபாய் தனது ட்விட்டரில் எனது இந்த வெற்றியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன் ஏனேனில் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைதான் இந்த வெற்றி என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்

ஆசியாட் விளையாட்டில் தங்க பதக்கம் உள்ளீட்ட பல்வேறு பதக்கங்கள் பெற்றிருந்தாலும் பத்மஸ்ரீ விருது வாங்கியிருந்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது என்பது என் கனவு அந்தக்கனவு இன்று நனவாகியிருக்கிறது என்கிறார்.
இந்த இடத்திற்கு வர இவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல
நாட்டின் ஏழ்மையான பிரதேசமான மணிப்பூர் மாநிலத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர்தான் மீராபாய்

இவரும் இவரது அண்ணனும் காட்டிற்கு போய் சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வருவர் அதை விற்று வரும் வருமானத்தை குடும்ப செலவிற்கு கொடுப்பர்.
குடும்பச் சுமையை மனதில் நிறுத்தி மீராபாய் ஒவ்வொரு நாளும் அண்ணனைவிட அதிக அளவு சுள்ளிகளை சுமப்பார் இது அண்ணனுக்கு மட்டுமல்ல அந்த கிராமத்தவருக்கே ஆச்சர்யம் தந்தது.இந்த சுமை துாக்கும் ஆரம்பம்தான் அவரை படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு நகரவைத்தது.
பளுதுாக்கும் போட்டியில் பயிற்சி தருகிறேன் வா என்று அங்கிருந்த பளுதுாக்கும் வீராங்கனை குஞ்சாராணி இவரை தனது மையத்திற்கு அழைத்தார் மையம் அறுபது கிலோமீட்டர் துாரத்தில் இருந்தது இருந்தாலும் பராவாயில்லை என்று சென்று பயிற்சி பெற்று வந்தார்
உடல் வலுப்பெற பால்,இறைச்சி என்று சத்தான உணவுகளை சாப்பிட வலியுறுத்தப்பட்டார் ஆனால் அதை எல்லாம் வருடத்தில் ஒரு முறையோ இரு முறையோ விசேஷ நாட்களில் மட்டுமே மீராபாய் அறிவார்.இருந்தும் குடும்பம் மொத்தமும் மீராபாய்க்காக தியாகம் செய்து சத்தான உணவை சாப்பிடவைத்தது.
வறுமையும் வைராக்கியமும் மீராபாய்க்கு அடுத்தடுத்த வெற்றியை தந்து இந்திய வீராங்கனையாக உயர்த்தியது. கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போதே பதக்கம் பெற்றிருக்க வேண்டியவர் முதுகுவலி காரணமாக தோல்வியைத் தழுவினார் இதே ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாமல் விடுவதில்லை என்று அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கடுமயைான பயிற்சி பெற்றார் கடந்த இரண்டு வருட கொரோனா சூழ்நிலையில் கூட மைதானமே கதி என்று இருந்தார்.
இத்தனை வருட போராட்டம் இவரை இன்று ஒலிம்பிக் வீராங்கனையாக நாட்டிற்காக பளுதுாக்கும் போட்டியில் வெள்ளி வெற்றி பெற்ற முதல் வீராங்கனையாக உயர்த்தியிருக்கிறது.
விடாமுயற்சியும்,நம்பிக்கையும் என்றைக்கும் கைவிடாது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நமது தேசத்தின் பெயரை உயர்த்தியுள்ள அவரை வாழ்த்துவோம் வரவேற்போம்
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE