சீர்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பா?

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (14)
Advertisement
'சினிமா ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா - 2021'ஐ, மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதை அறிந்ததும், சினிமா துறையில் இருக்கும் சிலரிடமிருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.அந்த எதிர்ப்பாளர்கள் வேறு யாருமல்ல. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எப்போதும் போர்க்குரல் எழுப்புவோர் தான்.சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சங்களோடு, மக்களுக்கு நல்ல செய்தியை,
உரத்தசிந்தனை, சீர்படுத்தும் முயற்சி, எதிர்ப்பு

'சினிமா ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா - 2021'ஐ, மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதை அறிந்ததும், சினிமா துறையில் இருக்கும் சிலரிடமிருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.
அந்த எதிர்ப்பாளர்கள் வேறு யாருமல்ல. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எப்போதும் போர்க்குரல் எழுப்புவோர் தான்.

சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சங்களோடு, மக்களுக்கு நல்ல செய்தியை, நல்ல கதைகள் மூலமாக சேர்க்க வேண்டிய ஓர் அற்புதமான ஊடகம். வேறு எதன் மூலமாகவும் நல்ல கருத்துகளை அவ்வளவு எளிதில் மக்களிடம் சேர்த்து விட முடியாது.


நல்ல கருத்து


அதனால் தான் சினிமா துறை முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.நம் நாட்டில் முதன் முதலில் சினிமா ஆரம்பமான போது, புராண, இதிகாச கதைகளை திரைப்படமாக எடுத்து, மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறினர். காலப்போக்கில் புராணப் படங்கள் மறைந்து, சமூகப் படங்களை தயாரித்து, அவற்றின் வாயிலாக நல்ல கருத்துகளை மக்கள் மனதில் ஆழப்பதியும் படி செய்தனர்.காதல் கதை படங்கள் கூட, நல்ல கருத்துகளையே சொல்லின. சண்டை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் வன்முறையோ, விரசமோ இல்லாமல் தான், அந்த கால படங்கள் இருந்தன. அந்த காலம் என்றால், ஏதோ சினிமா தோன்றிய காலம் என நினைத்து விடாதீர்கள். 30 - 40 ஆண்டுகளுக்கு முன் என வைத்துக் கொள்ளுங்கள்.குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய நல்ல கதை, பாடல்கள், படங்களும் அப்போது வெளிவந்தன.


அதன்பின், கால மாற்றத்திற்கேற்ப மக்களின் ரசனையும் மாறியது. நல்ல கதையும், நல்ல பாடல்களும் குறையத் துவங்கின. குடும்பக் கதை படங்களும், சமூக நீதியை உணர்த்தும் படங்களும் நாளடைவில் காணாமல் போயின. அழுத்தமான கதை இல்லாத படங்கள் கூட, அருமையான பாடல்களால் வெற்றி பெற்ற காலம் அது.

மனதிற்கு இதம் தரும் இசை, காதிற்கினிய பாடல்கள், தன்னம்பிக்கையூட்டும் திரைக் கதைகள், தலை நிமிரச் செய்யும் சமூக சீர்திருத்த வசனங்கள், பக்தி ரசத்தை ஊட்டும் பக்திப் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.பழைய படங்களைப் பார்க்க, விரக்தி மனநிலையுடன் செல்பவன் கூட, படம் முடிந்து வெளியே வரும்போது, தன்னம்பிக்கை பெற்று உற்சாகத்துடன் வருவான்.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தற்கொலை செய்ய எண்ணுபவனை கூட, ஒரே ஒரு பாடல் திருத்தி விடும். மனம் மாறி, தற்கொலை எண்ணத்தை கைவிடுவான்.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது 1980ல், திரையுலகம் அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த விழாவில் பேசிய எம்.ஜி.ஆர்., திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.'வெறும் வியாபார நோக்கத்திற்காக படங்களை எடுக்காதீர். நல்ல கதையம்சமும், நல்ல பாடல்களையும் உள்ளடக்கிய தரமான படங்களை எடுங்கள். வன்முறை, ஆபாச படங்களை எடுக்காதீர்.

'சண்டை காட்சிகளில் வன்முறையையும், காதல் காட்சிகளில் ஆபாசத்தையும் தவிருங்கள். இளைய தலைமுறையினருக்கு நல்ல கருத்துகளை சொல்லக் கூடிய படங்களை தயாரியுங்கள்.'தற்போது வெளி வரும் படங்களை பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது' என்றார்.

அவர் அவ்வாறு பேசிய 1980ம் ஆண்டிலேயே திரைப்படங்கள் அப்படி இருந்தன என்றால், இப்போது எப்படி இருக்கின்றன என்பதை, வாசகர்களின் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அரிவாளை எடுத்து, ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள்; பெண்ணின் குளியல் அறை காட்சிகள்.கொடூரமான முறையில் கொல்லும் காட்சிகள்; பெண்களை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள், இப்படித் தான் பெரும்பாலான படங்கள் துவங்குகின்றன.


ஜாதி, மத மோதல்


விறுவிறுப்பு என்ற பெயரில், படத்தின் ஆரம்பத்திலேயே வன்முறையை புகுத்தி விடுகின்றனர். விரும்பாத பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது; வீடு புகுந்து துாக்கி வந்து தாலி கட்டுவது; வேலை வெட்டி இல்லாமல், தாடி வைத்து பரட்டைத் தலையுடன் தண்ணியடித்து ஊரைச் சுற்றுவது.அழுக்கான ஒருவனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிப்பது என்பதாகவே, தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் காட்சியமைப்புகள் உள்ளன.பெற்றோரை மதிக்காத கதாபாத்திரங்களும், காதலனுடன் கைகோர்த்து, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓட்டம் பிடிக்கும் காட்சிகளுமே இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலும் இடம் பெறுகின்றன.

இல்லையேல், ஜாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் வசனங்கள், காட்சிகள் கொண்ட படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. நடந்த பழைய கதையை தான் சொல்கிறோம் என கூறி, மேல் ஜாதி, கீழ் ஜாதி என கூறி, ஒடுக்கப்பட்டதாக கூறப்படும் மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்குகின்றனர்.இப்படிப்பட்ட காட்சிகளை படமாக எடுப்பதால், சமுதாயத்திற்கு என்ன நன்மை என்பதை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் பணம் சம்பாதிப்பது மட்டுமே.

ஒரு காலத்தில், மலையாளப் படங்கள் என்றாலே ஆபாசம், கவர்ச்சி காட்சிகள் நிறைந்து இருக்கும். மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்கள், இளம் தலைமுறை இயக்குனர்கள் வந்த பின், அந்த படங்களின் கதைகள், காட்சி அமைப்புகள் மாறி, அனைத்து மொழியினரும் ரசிக்கும் வகையில் இயல்பாக எடுக்கப்படுகின்றன.தமிழ் சினிமா படங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் காலம் மலையேறி விட்டது.

எப்போதாவது ஒரு படம் அப்படி வருகிறது. வந்த வேகத்தில், தியேட்டர்களில் இருந்து துாக்கப்பட்டு, பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படுகின்றன.அந்த படங்களும், பழைய வன்முறை சம்பவங்களை அடிப்படையாக வைத்தே, பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. இல்லையேல், சிறுமியரை சீரழிக்கும் கும்பலை பிடிப்பது; ஜாதி மோதலை ஏற்படுத்தியவரை கொன்று பழி தீர்ப்பது என்பதாகத் தான், இப்போதைய படத்தின் கதைகள் உள்ளன.

இந்த படங்களுக்குத் தான், அந்த நடிகர்கள் 50 கோடி ரூபாய் முதல், 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். 4 - 6 மாதங்கள் நடித்ததால் கிடைத்த அபரிமிதமான பணத்தில், ஒன்றுக்கு பத்து பங்களாக்களை வாங்குகின்றனர்; ஏக்கர் 1,000 ரூபாய்க்கு போகும் நிலத்தையும், பத்து லட்ச ரூபாய்க்கு வாங்குகின்றனர்.மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கி, வீடுகளின் முன் நிற்க வைக்கின்றனர்.

ஆனால், வரி செலுத்த மாட்டேன் என கூறி, விலக்கு கேட்கின்றனர்.ரத்த சகதியான வன்முறை காட்சிகளை கொண்ட படங்களுக்கு, 24 மணி நேரமும், 'டிவி'களில் விளம்பரம் செய்யப்படுகின்றன. கொடூரமாக அடித்து கொல்வது; ரத்தம் பீறிட்டு பாய குத்திக் கொல்வது; பத்து பேர் சேர்ந்து, ஒருவனை கொடூரமாக தாக்குவது; ஒரு பெண்ணை பலர் கும்பலாக மேய்வது போன்ற காட்சிகளுடன் விளம்பரங்கள் வருகின்றன.

இந்த விளம்பரங்கள், எல்லா, 'டிவி'களிலும், இடைவெளி இல்லாமல் காட்டப்படுகின்றன. இதை பார்க்கும் சமூக ஆர்வலர்களுக்கு உடம்பு ஜில்லிட்டுப் போய் விடுகிறது.ஏற்கனவே வன்முறை, கொடூர குற்றங்கள் நிறைந்துள்ள சமுதாயத்தில், அவற்றை தவறு என கூறவோ, தவறுகளை திருத்தும் வகையிலோ படங்களை எடுக்காமல், முன் நடந்த கர்ண கொடூர காட்சிகளை, இப்போது நடந்தது போல காட்டுகின்றனர்.

இதைப் பார்க்கும் ஆரோக்கிய மனம் இல்லாத நபர், தானும் கத்தி, அரிவாள், துப்பாக்கியை எடுத்து கைதாகி, தன் வாழ்க்கையை சிறையில் கழிக்கிறார்.வளர்ந்தும் வளராத இளம் பருவத்தில் இருக்கும் சிறுவர், --சிறுமியரை கெடுக்கும் விதமாகத் தான் இப்போதைய சினிமா படங்கள் உள்ளன. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் விதமாக படங்களை தயாரித்து விட்டு, 'நாங்கள் நல்ல கருத்துகளை தானே சொன்னோம்...' என்று சப்பை கட்டுகட்டுகின்றனர்.

கத்தியின்றி, ரத்தமின்றி, வன்முறை காட்சிகள் இன்றி, எந்த படமாவது வந்துள்ளதா என நீங்கள் யோசித்து பார்த்தால், 40 - 50 ஆண்டுகளுக்கு முன் தான், அப்படி படங்கள் வந்ததை உணர்வீர்கள்.அந்த காலத்தில் வன்முறை, மிகவும் அரிதாகவே இருந்ததை அறிவீர்கள். இன்றைய இளைய தலைமுறையினர், தங்களது அபிமான நடிகர்கள் திரைப்படத்தில் செய்வதை போலவே,தாங்களும் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர்.வீட்டிலோ, வெளியிலோ பிரச்னை என்றால், உடனே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது; கும்பலாக சென்று தாக்குவது போன்ற காட்சிகளே இப்போது வெளியாகும் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.மது அருந்தும் காட்சி கள் இடம் பெறாத திரைப்படங்களே இப்போது வெளியாவது அபூர்வமாக உள்ளது. இவையெல்லாம் இளம் உள்ளங்களை கெடுக்காமல் என்ன செய்யும்... போதாக்குறைக்கு, தெருவுக்கு தெரு மதுபான கடைகள் வேறு இருக்கின்றன.
இன்னும் சில படங்களில், 'காமெடி' என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை சாடுவது, பெண்களை இழிவாக பேசுவது, மாற்றுத்திறனாளிகளை அவமரியாதை செய்வது என காட்சிகளை அமைத்து, 'சிரிக்க' வைக்கின்றனர்.

இதுபோன்ற சமூக அவலங்களை ஒழுங்குபடுத்த தான், 'ஒளிபரப்பு சட்டத் திருத்த மசோதா - 2021' கொண்டு வரப்படுகிறது.இந்த மசோதா வருவதன் மூலம், திரைப்படங்களில் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகளும், ஆபாச காட்சிகளும், இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் அம்சங்களும், சமூக விரோதிகளை ஊக்குவிக்கும் காட்சிகளும் தடுக்கப்படும்.எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடும் இந்த காலத்தில், 'சென்சார் போர்டு' என்ற தணிக்கை துறையிலும் புகுந்து விட்டது.


யார் அழுதனர்


இல்லாவிடில், தமிழ் திரையுலகம் இப்படி சீரழியும் வகையிலான படங்களை எப்போதோ தடுத்து நிறுத்தி இருப்பர்.பல காரணங்களால், திரைப்பட தணிக்கைத் துறை என்பது ஒரு சாரார் படங்களுக்கு மட்டுமே என்பதாகி, சமூகத்தை சீரழிக்கும் காட்சிகள் நிரம்பிய படங்களுக்கு அனுமதி கிடைத்து விடுகிறது.வியாபார நோக்கத்தோடு, சமூகத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களை எடுப்போர், மத்திய அரசின் புதிய மசோதாவை கண்டு அஞ்ச தேவையில்லை.முடிந்தால் நல்ல படங்களை எடுங்கள்; இல்லையேல், வேறு தொழில்களை பாருங்கள்.

நீங்கள் சினிமாவில் இல்லை என்று யார் அழுதனர்...இப்போதுள்ள கால கட்டத்தில் திரைப்படங்களும், 'டிவி' மெகா சீரியல்களும் வராமல் இருப்பதே, வரப்பிரசாதமாக மக்கள் கருதுகின்றனர்.எனவே, 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சினிமா சட்டத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது. இப்போது நாடும், சமுதாயமும் இருக்கும் சூழலில், தேச நலன் கருதி, சினிமா ஒளிபரப்பு சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதை, நல்ல தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்!

வ.ப.நாராயணன்

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:
மொபைல்: 95510 13773Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-ஜூலை-202118:51:58 IST Report Abuse
spr பார்க்கும் கேட்கும் அல்லது பேசும் ஒரு செய்தி தவறென்றால் அதனைக் கண்டிப்பது இயல்பான நல்ல குணம் மூன்று குரங்குகள் சொல்லும் செய்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துவிட்டு பின் வீட்டின் நடுவில் வைத்த அணுகுண்டு வைத்தது போல இருக்கும் தொலைக்காட்சியில் அத்தகு திரைப்படங்களை, தொடர் நிகழ்ச்சிகளை கொஞ்சம் கூட அருவருப்பின்றி வாழ்க்கையின் யதார்த்தம் என்று பாராட்டிப் பார்க்கும் பெற்றோர்கள் பெரியவர்களைக் கண்டு இது ஏற்கப்படக்கூடிய ஒன்றுதான் போலும் நாமும் அதனைப் பின்பற்றுவது தவறில்லை என்று அக்குழந்தைகள் நினைப்பது இயல்புதானே அருவருக்கத்தக்க காட்சிகள் பேச்சுக்கள் நிகழ்ச்சிகள் என்றால் தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைக்க வேண்டியதுதானே நாம் செய்வதில்லையே உபன்யாசம் செய்யும் அறிஞர்கள் கூட தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் கண்டிப்பது போல சுட்டிக்காட்டி கைதட்டல் வாங்குவது நாம் பார்க்கின்ற ஒன்றுதானே திரைப்பட அரங்குகளுக்குச் செல்லும் தேவையின்றி வீட்டிலேயே இக்கேடு கேட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் காண முடிகிறது இவற்றை வேண்டாமென்று ஒதுக்க அக்கருவிகளை செயலிழக்க வைக்க நம்மால் முடியும் என்றாலும் அதனைச் செய்வதில்லை வயது வந்த அறிவுரை சொல்ல வேண்டிய முதியவர்கள் கூட அத்தகு அருவருக்கத்தக்க படங்களை பார்ப்பதும் கலையினை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்குவிருது வழங்கி கௌரவிக்கிறோம் அதில் நடக்கும் அக்குணக்கேடர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளைக் கூட அளிக்கிறோம் என்றால் இது தவறென்று கூற நமக்கு அருகதை இருக்கிறதா? குழந்தைகளை இளைஞர்களை நம்மால் நல்வழி நடத்த இயலுமா? திரைத்துறை மூலம் அவர்களைக் கவர முடியும் என்று கம்பரசம் படைத்த அறிஞர் கண்டுபிடித்த இந்த நச்சு மரம் இன்று ஆழமாக தமிழகம் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் வேரோடிப் போயிற்று களைவது அத்தனை எளிதல்ல இந்த நிலையில் தணிக்கை செய்வதே படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை அழிக்கும் முயற்சி என்றொரு கூக்குரலும் எழுந்ததே சமுதாயம் விரும்பினாலொழிய இவை அழியாது புலம்பி பயனில்லை
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202120:28:11 IST Report Abuse
Rajagopal முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னாள் (எழுபதுகளில்) நியூ வேவ் என்று ஒன்று கிளம்பியது. எல்லா படங்களிலும் கற்பழிப்பு காட்சிகள் தவறாமல் இடம் பிடித்தன. குடும்பத்தோடு பார்க்கும் படியாக முக்கால்வாசி படங்கள் கிடையாது. படம் போஸ்டரிலேயே ஹீரோயினை நான்கைந்து பேர் நாலு பக்கங்களிலும் பிடித்து இழுப்பது போடப் பட்டிருக்கும். படத்தில் கற்பழிப்பு காட்சிகளை வேண்டுமென்றே இழுப்பார்கள். ஹீரோ அப்புறம்தான் வருவார். ஏ செர்டிபிகேட் எப்படியாவது வாங்கினால் படம் ஓடிவிடும் என்று தயாரிப்பாளர்கள் கதைக்கு சம்மந்தம் இல்லாமலே கற்பழிப்பு காட்சிகளை புகுத்துவார்கள். இதுதான் அந்த பொன்னான நாட்கள். இந்த ஆள் என்னவோ அப்போது எல்லோரும் விரலை சப்பிகொண்டு இருந்தது போல ஜோடிக்கிறார். திராவிட கட்சிகளின் ஆக்கிரமிப்பு தமிழ் திரையுலகை கேடு கேட்ட நிலைக்கு கொண்டு செல்லும் காலம் துவங்கிய நேரம் அது. எம்ஜியாரே ராதா சலூஜாவை முரடன் வேஷம் போட்டு கற்பழிக்க முயல்வது போல எடுக்கும் நிலை வந்தது. குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் அப்போதும் கிடையாது.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
25-ஜூலை-202120:26:48 IST Report Abuse
தமிழ்வேள் சினிமாவே தேவையில்லை என்னும்போது சென்சார் மட்டும் என்னசெய்யபோகிறது ? ஒரு ஐம்பது ஆண்டுகளுக்காவது கலைத்துறை என்ற ஒன்று ஊற்றி மூடப்படவேண்டும் .....பாரத விடுதலைக்கு முன்பு , கூத்தாடிகளுக்கு எவனும் வீடு கொடுக்கமாட்டான் ..ஊருக்கு வெளியே கொட்டாயில் தங்கினார்கள் அல்லது , எவனாவது சபலபுத்தியுள்ள மைனர் பண்ணையார் வீடுகொடுத்து தனது மேற்படி தேவையையும் நிறைவேற்றிகொள்ளவான் ..அந்த நிலை மீண்டும் வரவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X