ஐதராபாத்: கடந்த லோக்சபா தேர்தலில், தனக்கு ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி(டிஆர்எஸ்) எம்.பி., மாலோத் கவிதாவிற்கும், அவரது உதவியாளர்களுக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமின் வழங்கி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மகபுபாபாத் லோக்சபா தொகுதி எம்.பி., ஆக இருப்பவர் மாலோத் கவிதா. கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது அவரது உதவியாளர் சவுகத் அலி, கவிதாவிற்கு ஓட்டுப்போட வேண்டும் எனக்கூறி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளார். அதனை, தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு, நம்பள்ளியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, கவிதாவிற்கு ஆதரவாக பணம் கொடுத்தததை சவுகத் அலி ஒப்பு கொண்டார். இதனையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கவிதா மற்றும் சவுகத் அலி ஆகியோருக்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும், தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், சிட்டிங் எம்.பி., ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE