புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு ரூ.ஒரு கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல்நாளான நேற்று (ஜூலை 24) மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும், ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையும் மீராபாய் படைத்துள்ளார். கடைசியாக 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் கர்னம் மல்லேஸ்வரி தான் பளுதூக்குதலில் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் இன்று கூட்டம் நடத்தினோம். அப்போது மீராபாய் வெற்றி குறித்து அறிவித்தேன். இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று பட்டியல் கணக்கை துவங்கியுள்ளார். மீராபாய்க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

மீராபாய் சானுவை ஊக்கப்படுத்தும் விதமாக மணிப்பூர் அரசு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கும். இனிமேல், மீராபாய் சானு ரயில்நிலையங்களில் டிக்கெட் வசூலிக்கும் பணியைச் செய்ய வேண்டாம். உங்களுக்காக சிறந்த பணியிடத்தை வழங்க இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசுவேன். உங்களுக்கு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE