சென்னை-'மொபைல் போனுக்கு, 'லிங்க்' அனுப்பி, மர்ம நபர்கள் நுாதன மோசடியில் ஈடுபடுவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கி கணக்குடன் ஆதார் எண், பான் கார்டு இணைக்க வேண்டும்; 'நெட் பேங்கிங்'கை புதுப்பிக்க வேண்டும் என, மர்ம நபர்கள் வங்கியில் இருந்து அனுப்புவது போல, http://6328633cafe2.ngrok.io/bank என்ற 'லிங்க்'கை, பொதுமக்களின் மொபைல் போனுக்கு அனுப்பி வருகின்றனர்.இந்த லிங்க்கை கிளிக் செய்த 10 நிமிடங்களுக்குள், பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் சுருட்டப்படுகிறது.
அத்துடன், ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்தது போலவும், 'ஆன்லைன்' வாயிலாக பொருட்கள் வாங்கியது போலவும் பணம் சுருட்டப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். வங்கியில் இருந்து அல்லது தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க் எதையும் பொதுமக்கள் கிளிக் செய்ய வேண்டாம்.

மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, வங்கி ஏ.டி.எம்., கார்டு ரகசிய குறியீட்டு எண்கள் மற்றும் ஓ.டி.பி., எண் என, எது பற்றி கேட்டாலும் தொடர்பை துண்டித்து விடவும். அதேபோல, மர்ம நபர்கள் ஏதேனும் ஒரு இலக்க எண்ணை அனுப்பி, அதை, 'பார்வேர்டு' செய்யுங்கள் என்று கூறினால் அதை செய்ய வேண்டாம்; தவறினால் பணத்தை இழக்க நேரிடும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.