இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்'லிப்ட்' அறுந்து 6 பேர் பலிமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை வொர்லி பகுதியில் நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் 'லிப்ட்' அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியாயினர். படுகாயமடைந்த ஒருவர் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கட்டட ஒப்பந்ததாரர் மற்றும்
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்

'லிப்ட்' அறுந்து 6 பேர் பலி

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை வொர்லி பகுதியில் நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் 'லிப்ட்' அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியாயினர். படுகாயமடைந்த ஒருவர் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் முனந்த் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை தேடுதலைத் துவங்கினர். அப்போது பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

தேர்தல் கொலை: 2 பேர் கைது

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றம், அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை என சமீபத்தில் கூறியது. வன்முறைகள் தொடர்பாக, தேசிய மனித உரிமை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து பா.ஜ., பிரமுகர் அபிஜித் சர்கார் கொலை வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2,200 கோடி மோசடி

புதுடில்லி: ஜவுளி, ஊடகம், மின்சாரம், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பிரபல குழும, நிறுவன அலுவலகங்கள் பல நகரங்களிலும் உள்ளன. சமீபத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் அந்த அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போலி பரிவர்த்தனைகள் வாயிலாக அந்நிறுவனம் 2,200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிலில் வெடிகுண்டு புரளிஅயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தி மாவட்டம் பைசாபாத் ஹனுமன் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் ஒருவர் போலீசாரிடம் போனில் கூறினார். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், கோவிலில் பக்தர்களை வெளியேற்றி நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இதற்கு காரணமான அனில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு: தெலுங்கானா எம்.பி., க்கு சிறை

ஐதராபாத்-கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி., மலோத் கவிதாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. விசாரணைகடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது மாஹ்பூபாபாத் லோக்சபா தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பில் மலோத் கவிதா, 41, போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது இவரது உதவியாளர் சவுகத் அலி, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் தந்தபோது, வருவாய் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சவுகத் அலியும், இரண்டாவது குற்றவாளியாக எம்.பி., மலோத் கவிதாவும் சேர்க்கப்பட்டனர்.தெலுங்கானாவின் நம்பள்ளி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது, பறக்கும் படை அதிகாரிகள் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர். மேலும், எம்.பி., கவிதா கொடுத்த பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகித்ததை சவுகத் அலி ஒப்புக் கொண்டார்.மேல்முறையீடுஇதையடுத்து எம்.பி., மலோத் கவிதா மற்றும் அவரது கூட்டாளி சவுகத் அலி ஆகியோருக்கு, தலா ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மேல்முறையீடுக்காக, இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், எம்.பி.,யாக பதவி வகிக்கும் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை. மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி 2018ல் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜா சிங், டி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ., தனம் நாகேந்தர் ஆகியோரை ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்

ராமநாதபுரத்தில் 3 போலி நிருபர்கள் கைது

ராமநாதபுரம்---ராமநாதபுரத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் நகரில் சில நாட்களாக 3 பேர் கடைகளுக்கு சென்று நிருபர்கள் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தனர். நேற்று அரண்மனை சாலை, சாலை தெருவில் ரூ.12,000 வசூல் செய்தனர். வழிவிடும் முருகன் கோயில் எதிரே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டினர்.உரிமையாளர் ஜவஹர் அலி புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நிருபர்களான பாண்டியூர் முருகன் 30, பெருவயல் வேல்முருகன் 26, கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பு ரூபசிலன் 51, ஆகியோரை கைது செய்தனர். போலி அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது.

கல்லுாரி மாணவி கொலை ஒருதலை காதலன் கைது

திருவாரூர்-ஒருதலை காதலால், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி தலையில் அம்மி குழவியை போட்டு கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் மகள் மவுனிகா, 18. இவர், திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை அருகே பேட்டையில் வசிக்கும் பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்தார்.இவரது உறவினரான சிவசங்கரன், 28, என்பவர், மவுனிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர், தம்பிக்கோட்டையில் இறால் பண்ணையில் பணிபுரிகிறார்.

இவருக்கு பெண் தர மவுனிகாவின் பெற்றோர் மறுத்து உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ராஜகுமாரி வீட்டிற்கு சென்று, துாங்கி கொண்டிருந்த மவுனிகா தலையில் அம்மி குழவியை துாக்கி போட்டுள்ளார்.அக்கம் பக்கத்தினர், மவுனிகாவை படுகாயத்துடன் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று காலை அவர் இறந்தார். சிவசங்கரனை போலீசார் கைது செய்தனர்.

2 மகள்களுடன் கிணற்றில் குதித்த பெண் நீரில் மூழ்கி குழந்தைகள் பலி; தப்பிய தாய்

காரியாபட்டி---விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் தாய் குதித்தார். இதில் 2 குழந்தைகள் பலியான நிலையில் தாய் உயிர் பிழைத்தார்.

காரியாப்பட்டி அருகே கே.ஆலங்குளம் புஷ்பவனம் 36. இவருக்கு இரண்டு மனைவிகள். 2வது மனைவி பிரவீனா 28. இவருக்கு அஸ்மிதா 3, பூமிகா 1 என்ற குழந்தைகள் இருந்தனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று பிரவீனா தாக்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் தமராக்கியிலுள்ள தாய் வீட்டிற்கு இரு குழந்தைகளுடன் பஸ்சில் சென்றவர் பாதியில் காரியாபட்டி திம்மாபுரத்தில் இறங்கினார். தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அங்குள்ள கிணற்றில் இரு குழந்தைகளுடன் குதித்தார். இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தது. மோட்டாரில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து பிரவீனா தப்பினார். உயிருக்கு போராடிய பிரவீனா மற்றும் குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


உறவினர்களுக்காக கொரோனா தடுப்பூசி திருட்டு மகப்பேறு உதவியாளர் வீட்டில் 95 டோஸ் பறிமுதல்

வேடசந்துார்-கரூர் மருத்துவமனையில் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி திருடிய மகப்பேறு உதவியாளர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வீட்டில் வைத்து உறவினர்களுக்கு செலுத்தினார். அங்கு சோதனையிட்டு 95 டோஸ் தடுப்பூசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேடசந்துார் அய்யனார் கோயில் அருகே வசிப்பவர் தனலட்சுமி 58. இவர் கரூரில் உள்ள கஸ்துாரிபாய் தாய்-சேய் நல மையத்தில் அரசு மகப்பேறு உதவியாளராக பணிபுரிகிறார். அங்கிருந்து கொரோனா தடுப்பூசிகள் திருடிய தனலட்சுமி வீட்டில் வைத்து உறவினர்களுக்கு போட்டார். புகாரின்பேரில் டாக்டர்கள் சுரேன், அருண் நேற்று தனலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்தி 95 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை பறிமுதல் செய்தனர்.தனலட்சுமியிடம் விசாரித்ததில் வீட்டில் இருவருக்கு போட 2 டோஸ் தடுப்பூசி கேட்டு வாங்கியதும், மற்ற தடுப்பூசிகளை திருடி வந்ததும் தெரியவந்தது.வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி கூறுகையில்,''புகாரையடுத்து நடத்திய சோதனையில் 95 டோஸ் தடுப்பூசிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுவரை 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

திண்டுக்கல், கரூர் மருத்துவத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம்'' என்றார்.இந்நிலையில் தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்து, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''சம்பவம் குறித்து போலீசில் புகார் தரப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வெளியே சென்றது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

பாதிரியார் வழக்கில் மேலும் ஒருவர் கைது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது

நாகர்கோவில்-சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கிறிஸ்தவ ஆலய ஆராதனை தடை செய்யப்பட்ட விவகாரத்தில் அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருங்கல் பனவிளை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டார். ஜாதி, ஹிந்து மதம், ஹிந்து கடவுள், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததோடு, தி.மு.க. வெற்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் போட்ட பிச்சை என்று பேசினார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஜார்ஜ் பொன்னையா மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து தப்பியபோது மதுரை அருகே கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் ஸ்டீபன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.


latest tamil news


வேகமாக கார் ஓட்டிய நடிகை யாஷிகா படுகாயம் விபத்தில் வெளியே துாக்கி வீசப்பட்ட தோழி பலி
சென்னை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், 'பார்ட்டி' முடிந்து, தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம், கும்மாளம் போட்டு விட்டு, மின்னல் வேகத்தில் கார் ஓட்டிய நடிகை யாஷிகா ஆனந்த், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

அவரின் தோழி, துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.'துருவங்கள் பதினாறு; ஜாம்பி, கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த், 22. இவர், தனியார் 'டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ் சீசன் - 3'ல் பங்கேற்று பிரபலமானார்.கவர்ச்சி கன்னியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சூடு பறக்கும் படங்களை வெளியிட்டு, இளைஞர்களை கட்டிப்போட்டு வருகிறார்.இவர் வார விடுமுறை நாட்களில், சில நடிகர்கள், ஆண் நண்பர்களுடன், கிழக்கு கடற்கரை சாலையில், 'ஜாலி'யாக ஊர் சுற்றி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.

கும்மாளம்இரு தினங்களுக்கு முன், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் தோழி வள்ளிசெட்டி பவானி, 28, என்பவரை சென்னைக்கு வரவழைத்துள்ளார். இவரதுதந்தை ராதாகிருஷ்ணா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் வசிக்கிறார். யாஷிகா ஆனந்த் டில்லியைச் சேர்ந்தவர். இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கிறார்.இவர்கள் இருவரும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சையது, 21; அமீர், 19, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின், 'டாடா ஹாரியர்' காரில், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் சென்றுள்ளனர்.இவர்களது கார் இரவு, 10:12க்கு கானத்துாரை கடந்துள்ளது.

நான்கு பேரும், ஆட்டம், பாட்டம் என, கும்மாளத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், காரிலேயே பார்ட்டி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சென்னை திரும்பினர்.காரின் மேல் பகுதியில், திறக்கும் வசதியுள்ள இடத்தில் தலையை நீட்டி, கைகளை விரித்து வள்ளிசெட்டி பவானி, பலமாக சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார். சையது, அமீர் ஆகியோர் பின் இருக்கையில் போதையில் கிறங்கிய நிலையில் இருந்துள்ளனர்.தோழி பலிஇரவு, 11:15 மணியளவில் கார், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, சூலேரிக்காடு பகுதியில், 122 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. வள்ளிசெட்டி பவானி முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.காருக்குள் பாடல் அலறியது. அதற்கு ஏற்ப நான்கு பேரும் கூச்சல் போட்டபடி இருந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், யாஷிகா ஆனந்த் காரை, சாலையின் மையத்தடுப்பில் மோதினார். அப்போது, காருக்கு வெளியே துாக்கி வீசப்பட்ட வள்ளிசெட்டி பவானி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.கார், 50 தடவைக்கு மேல் உருண்டு சாலை ஓரத்தில் கிடந்தது. காருக்குள் யாஷிகா ஆனந்த், இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கிடந்தார். சையது, அமீர் ஆகியோர் பலத்த காயத்துடன் மரண பீதியில், 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறினர். சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட மூவரையும் காப்பாற்றினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீசார், யாஷிகா ஆனந்த், சையது, அமீர் ஆகியோரை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பினர். முதலில் அடையாறில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வள்ளிசெட்டி பவானியின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து, மாமல்லபுரம் போலீசார், யாஷிகா ஆனந்த் மீது, கொலை குற்றம் ஆகாது மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அசட்டு துணிச்சலுடன் செயல்பட்டு காயம் ஏற்படுத்துதல் என, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.யாஷிகா உள்ளிட்ட நால்வரும், மது விருந்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோவளத்திற்கு சைக்கிள் பயணம் சென்ற போது, அவருடன், 'செல்பி' எடுத்த நடிகை யாஷிகா, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இவர் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்துகிறார். கடந்த ஆண்டு விழாவில் முதல்வராக இருந்த பழனிசாமி கலந்து கொண்டார். இவரது விழாக்களில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெ., வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருநெல்வேலி:டூவீலர்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரவில் இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தீப்பற்றி கொண்டன. இதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-202122:42:19 IST Report Abuse
DARMHAR குடித்து விட்டு கார் ஓட்டினால் விபத்து நடக்காமலா இருக்கும்? தயவு, தாட்சண்யம் பாராமல் விபத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிதிகள்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X