திருச்சி : ''பீஹார்காரர்களுக்கு நம்மை விட மூளை அவ்ளோ இல்லை,'' என, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசினார்.

திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க., சார்பில், 'திசை காட்டும் திருச்சி' என்ற பெயரில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதை துவக்கி வைத்து, தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசியதாவது:பீஹார்காரர்களுக்கு நம்மை விட மூளை அவ்ளோ இல்லை.
ஆனால், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், 4,000க்கும் மேற்பட்ட பீஹார்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுதும் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பராக அவர்களை பார்க்கலாம்.ஹிந்தியும் தெரியாதுஅதற்கு காரணம், அப்போது ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தான். அவங்க ஊர்க்காரர்களை எல்லாம், தேர்வில் பிட் அடித்து பாசாக்கி, ரயில்வேயில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவர்களுக்கு தமிழும் தெரியாது; ஹிந்தியும் தெரியாது.
மத்திய அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சோபிக்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற நாம் முயலவில்லை. வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் பிற மாநில மக்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், கேரளாவிற்கு அடுத்தபடியாக, தமிழக இளைஞர்கள் அதிக புத்திசாலித்தனம் மிக்கவர்கள். எனவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும். என்னை கருணாநிதி எப்போதோ எம்.பி., ஆக சொன்னார். எனக்கு ஹிந்தியும்தெரியாது, ஆங்கிலமும் தெரியாது எனக் கூறி, அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்.

அதிருப்தி
தமிழகத்தில், 80 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனவே, இதுபோன்ற பயிற்சி முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பீஹாரிகள் பற்றி அமைச்சர் பேசியது, அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE