புதுடில்லி: ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி 2வது சுற்றில் போராடி தோல்வியுற்றார். இதற்கு அவர், ‛நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை, என்னை மன்னிக்கவும்,' எனக் கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள பவானி தேவி, முதல் சுற்றில் துனிசியாவின் நாதியா பென் அஸிஸி உடன் மோதினார். அதிரடி காட்டிய பவானி, 15 -3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப்பெற்று டேபிள் ஆப் 32 சுற்றுக்கு தகுதிப்பெற்று சாதனைப் படைத்தார்.

இரண்டாவது சுற்றில் பவானி தேவிக்கு உலகின் 3ம் நிலை வீராங்கனையான பிரான்சின் மேனோன் புரூனட்டை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. எனினும் நம்பிக்கையோடு போட்டியைத் துவங்கிய பவானிக்கு, புரூனட் கடும் சவால் கொடுத்தார். இறுதியில் 7 -15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தேவி 2வது சுற்றில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக தேர்வானது மட்டுமின்றி 2வது சுற்று வரை முன்னேறிய பவானி தேவிக்கு பலரும் ஆறுதல் கலந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.

இது தொடர்பாக பவானி தேவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: மிகப்பெரிய நாள்.. உற்சாகமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. முதல் போட்டியில் 15-3 என வென்று, ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் வென்ற முதல் இந்தியராக ஆனேன். 2வது போட்டியில் உலகின் 3ம் வீராங்கனையுடன் 7-15 என தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை. என்னை மன்னிக்கவும். ஒவ்வொரு முடிவிலும் ஒரு துவக்கம் இருக்கிறது. நான் எனது பயிற்சியை தொடர்வேன்.
நிச்சயமாக பிரான்சில் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று என் நாட்டை பெருமைப்படுத்த கடுமையாக உழைப்பேன். எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிக்க நன்றி நான் உங்கள் அனைத்து பிரார்த்தனைகளுடன் அடுத்த ஒலிம்பிக்கில் மிகவும் வலுவாகவும் வெற்றிகரமாகவும் வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.