அடிவாரத்துல ஆக்கிரமிப்பு கலையுது... இலைக்கட்சிக்கு அடி வயித்த கலக்குது!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''மருதமலை போயிருந்தீங்களே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆய்வு பற்றி ஏதாவது சிறப்பு தகவல் உண்டா,'' என கேட்டாள்.''அதுவா, 'லிப்ட்' அமைக்க தேர்வு செஞ்சிருந்த இடத்தை காண்பித்து, திட்டத்தை பத்தி விளக்குனாங்க. ஏகப்பட்ட குளறுபடி
 அடிவாரத்துல ஆக்கிரமிப்பு கலையுது...  இலைக்கட்சிக்கு  அடி வயித்த கலக்குது!

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''மருதமலை போயிருந்தீங்களே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆய்வு பற்றி ஏதாவது சிறப்பு தகவல் உண்டா,'' என கேட்டாள்.

''அதுவா, 'லிப்ட்' அமைக்க தேர்வு செஞ்சிருந்த இடத்தை காண்பித்து, திட்டத்தை பத்தி விளக்குனாங்க. ஏகப்பட்ட குளறுபடி செஞ்சிருந்ததை கண்டுபிடிச்ச மினிஸ்டர், அதிகாரிகளுக்கு, 'செம டோஸ்' கொடுத்தாரு,''

''கட்சி நிர்வாகிகள் பலரும், அறங்காவலர் பதவிக்கு 'துண்டு' போடுறதுக்காக, காலையில, 10:00 மணியில இருந்து சாயங்காலம், 4:00 மணி வரைக்கும் காத்திருந்தாங்க. ஒருத்தரையும் சந்திச்சு பேசலை; பதவி ஆசையில காத்திருந்தவங்க நொந்து போயிட்டாங்க. மரியாதை நிமித்தமா வணக்கம் சொன்னவங்களுக்கு மட்டும், திருப்பி வணக்கம் சொன்னாரு,''

''அடிவாரத்துல இருக்கற இடத்தை, அ.தி.மு.க., ஆட்சியில், 'பவர் சென்டராக' இருந்தவர்கள் ஆக்கிரமிச்சிருப்பதா, உடன்பிறப்புகள் அமைச்சரின் காதை கடித்தனர். அந்த இடத்துக்கு நேரில் போன மினிஸ்டர், சம்பந்தப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம்னு, 'சர்வே' செஞ்சு பார்க்கச் சொன்னாரு. ஆக்கிரமிப்பு இருந்தா, உடனடியா மீட்டாகனும்னு கலெக்டருக்கும், கார்ப்பரேஷன் கமிஷனருக்கும் 'ஆர்டர்' போட்டிருக்காரு,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.

''ஸ்கூலுக்கும் போனாராமே,''

''ஆமாப்பா, மருதமலை தேவஸ்தான பள்ளியில மாணவர் சேர்க்கையை விசாரிச்சாரு. ஆசிரியர்களை தனியா கூப்பிட்டு, 'ஸ்டூடன்ட்ஸ் எண்ணிக்கை கம்மியா இருக்கு; டீச்சர்ஸ் எண்ணிக்கை அதிகமா இருக்கு. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தலைன்னா, டீச்சர்ஸ் எண்ணிக்கையை குறைச்சிடுவேன்'னு 'வார்னிங்' செஞ்சாருப்பா,'' என்ற சித்ரா, ''முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில, கட்சி ஆபீசுல மீட்டிங் நடந்துச்சாமே,'' என கேட்டாள்.

''ஆமாக்கா, தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் செய்யப் போறாங்களாம். அதுக்கான ஆலோசனை கூட்டம் நடந்துச்சு. நம்மூர்ல இருக்கற அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளை, தி.மு.க., இழுக்கற வேலையை செஞ்சிட்டு இருக்கறது, வேலுமணி பேச்சுல வெளிப்படையா தெரிஞ்சுச்சு,''

''அவர் பேசுறப்போ, 'யூனியன் சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்களை சிலர் ஆசை வார்த்தை சொல்லி கூப்பிடுறாங்க. தி.மு.க.,வுக்கு போனா, ஒரே ஒரு நாள் செய்தி,''

''தோப்பு வெங்கடாசலம் போனாரு; 'டிவி'யில ஒரு நாள் செய்தி சொன்னாங்க. அதுக்கப்புறம், எம்.எல்.ஏ., - அமைச்சர்களை சந்திக்கப் போயிருக்காரு. எல்லோரும் முகத்தை திருப்பிக் கிட்டாங்களாம். அந்த கட்சியில இருப்பவர்கள் ஒத்துக்கொள்வார்களான்னு பேசியிருக்காரு,''

''மித்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு முன்னாடி, கொங்கு மண்டலத்துல அ.தி.மு.க.,வை உடைக்கறதுக்கு திட்டம் போட்டு, கட்சி நிர்வாகிகள் பலரையும், பல 'ரூட்'டுல பேசிக்கிட்டு இருக்காங்களாம். நம்மூர்ல தான், 'ரெய்டு' நடக்கும்னு, இலைக்கட்சி வி.ஐ.பி.,யே எதிர்பார்த்து காத்திருந்தாராம்; ஆனா, கரூர்ல நடந்திருக்கு,''

''ஆமாக்கா, அதுக்கு 'பிளான்' போட்டுட்டு இருக்காங்களாம். இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமான மூணு பேரை, கண்காணிப்பு வளையத்துல வச்சிருக்காங்களாம். கைது செய்ற அளவுக்கு போதிய ஆதாரம் இன்னும் திரட்ட முடியாம இருக்காங்களாம். எந்தெந்த கம்பெனி பெயரில் வேலை நடந்திருக்கு; எந்தெந்த வங்கி கணக்குல, பணம் கை மாறியிருக்குன்னு விசாரிக்கிறாங்களாம்,'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள் மித்ரா.

அ.தி.மு.க., தலைவர்கள், டில்லியில் முகாமிட்டிருக்கும் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ''டெய்லி, 5,000 ரூபாய் மாமூல் கொடுக்கணும்னு ஒரு எஸ்.ஐ., கறாரா உத்தரவு போட்டிருக்காராமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா, உண்மைதான்! சாயிபாபா கோவில் ஸ்டேஷன் லிமிட்டுல, ஆறு 'டாஸ்மாக்' கடை இருக்குதாம். போலீஸ் தரப்புல, 'பார்' உரிமையாளர்களை கூப்பிட்டு பேசியிருக்காங்க. எவ்வளவு நேரம்னாலும் வித்துக்கிடலாம்; டெய்லி, 5,000 ரூபாய் தரணும்; காலையில தந்திரணும்னு சொல்லியிருக்காங்களாம். அதுக்கு கட்டுப்பட்டு, இரண்டு கடைக்காரங்க மட்டும் மாமூல் கொடுக்குறாங்களாம்,'' என்ற சித்ராவின் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதை பார்த்து, ''சொன்னபடி 'வேலை'யை முடிச்சிட்டாராம்,''

''எனக்கொரு போலீஸ் மேட்டர் தெரியும், சொல்லட்டுமா,'' என்றபடி, ''முந்தைய ஆட்சியில இருந்தவங்களுக்கு விசுவாசமா இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புக்கு வீடு கட்டியிருக்கிற இன்ஸ்., ஒருத்தரு, உடன்பிறப்பு நிர்வாகியை சந்திச்சு, கணிசமான தொகையை கொடுத்து, 'வெயிட்'டான பதவியை வாங்கிட்டு, 'எஸ்கேப்' ஆகிட்டாராம்.

அவரது வாழ்க்கை, 'ஒளி' வீசுதாம். இருந்தாலும், வீடு கட்டுனது சம்பந்தமா விசாரணை நடக்குதாம். அந்த விவகாரத்துல சிக்குவாருன்னு, போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''அதெல்லாம் இருக்கட்டும்! வாட்ஸ் ஆப்ல கலெக்டருக்கு புகார் போனதும், உடனே, விசாரிக்கிறதுக்கு வருவாய்த்துறையினர் போனாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''ஆமாக்கா, நஞ்சுண்டாபுரத்துல சுத்திகரிப்பு நிலையம் கட்டுறதுக்கு எதிரே இருக்கற குடியிருப்புக்குள்ள, நீர் வழித்தடத்தை ஆக்கிரமிச்சு, ரோடு போட்டிருக்கிறதா, கலெக்டருக்கு, 'வாட்ஸ்ஆப்'புல புகார் போயிருக்கு,''

''உடனே, தாசில்தாரையும், வருவாய் ஆய்வாளரையும் அனுப்பியிருக்காரு. ஆக்கிரமிப்பு இருக்கறதை உறுதி செஞ்சிட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வளாகத்துக்குள்ள எந்த அதிகாரி போயிட்டு வந்தாலும், கொஞ்ச நாள்ல, 'சைலன்ட் மோடு'க்கு போயிடுறாங்க,''

''கார்ப்பரேஷன் கமிஷனரும், டெபுடி கமிஷனரும் படுவேகமா இருக்காங்களாமே,''

''கார்ப்பரேஷன் ஆபீசுல 'ரெவ்யூ மீட்டிங்' நடந்தாலே, துறை தலைவர்களுக்கு உதறல் எடுக்குதாம். ரெண்டு அதிகாரிகளும், 'லெப்ட், ரைட்' வாங்குறாங்களாம். ஒவ்வொரு பிரச்னையையும் நுணுக்கமா கேட்டு, துளைச்சு எடுக்குறாங்களாம். கார்ப்பரேஷன் ஆபீசே கதிகலங்கி போயிருக்கு,''

''இனிமே, ஒவ்வொரு மண்டல அலுவலகத்துக்கும், கமிஷனர் ஆய்வுக்குப் போகப் போறாராம். அதனால, ஜோனல் அதிகாரிகள் பீதியில இருக்காங்களாம்,''

''ஒரு செக்சனை பார்த்து, புதுசா வந்திருக்கிற அதிகாரி வாயடைச்சு போயிட்டாராமே,''

''ஆமாக்கா, கார்ப்பரேஷன் மெயின் பில்டிங்ல இருக்கற, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு அந்த அதிகாரி போயிருக்காரு. பளபளன்னு இருந்திருக்கு. ஒவ்வொரு ஆபீசருக்கும் தனித்தனி ரூம்; ஏ.சி., வசதி. மத்தவங்களுக்கு 'சென்ட்ரலைஸ்டு' ஏ.சி., ஒவ்வொரு அதிகாரி அறையிலும், பெயர் பலகை தொங்கியிருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு, மத்த செக்சனெல்லாம் இப்படி இல்லையே. கோடிக்கணக்குல புழங்குற இடங்கிறதுனால, சொகுசா வச்சிருக்கீங்களா என, 'கமென்ட்' அடிச்சிருக்காரு,''

''துாத்துக்குடிக்கே ஒரு அதிகாரியை, திருப்பி அனுப்ப போறாங்களாமே,''

''அதுவா, ஸ்மார்ட் சிட்டி வேலைக்கு 'ஒத்தாசையா' இருக்குமேன்னு, துாத்துக்குடியில இருந்து ஒருத்தரை, இன்ஜி., செக்சன் உயரதிகாரி அழைச்சிட்டு வந்தாரு. இப்போ, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவை கலைக்க வேண்டிய நெருக்கடி வந்திருக்கிறதுனால, வெளியூர்ல இருந்து வந்த அதிகாரிகளை, திருப்பி அனுப்பப் போறாங்களாம்,'' என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X