கஞ்சா கலெக் ஷனில், அஞ்சாத போலீஸ்!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021
Advertisement
திருமுருகன்பூண்டி மாதவவினேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்த சித்ராவும், மித்ராவும், கோவிலுக்கு வெளியே உள்ள திருஞானசம்பந்தர் பூங்காவில் அமர்ந்தனர்.''மினிஸ்டர் கலந்துகிட்ட நிகழ்ச்சியில், அடிதடி நடக்காத குறையா, ஆளுங்கட்சியினர் மத்தியில கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாயிடுச்சாமே...'' என ஆரம்பத்திலேயே அரசியல் பேச்சை எடுத்தாள் சித்ரா.''ஆமாங்க்கா. ஹிந்து
கஞ்சா கலெக் ஷனில், அஞ்சாத போலீஸ்!

திருமுருகன்பூண்டி மாதவவினேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்த சித்ராவும், மித்ராவும், கோவிலுக்கு வெளியே உள்ள திருஞானசம்பந்தர் பூங்காவில் அமர்ந்தனர்.

''மினிஸ்டர் கலந்துகிட்ட நிகழ்ச்சியில், அடிதடி நடக்காத குறையா, ஆளுங்கட்சியினர் மத்தியில கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாயிடுச்சாமே...'' என ஆரம்பத்திலேயே அரசியல் பேச்சை எடுத்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா. ஹிந்து அறநிலையத்துறை மினிஸ்டர், இந்த கோவிலுக்கு வந்தப்ப, அவிநாசியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிங்க தான், அவரை சுத்தி சுத்தி வந்தாங்களாம். அதே ஊர் கட்சி நிர்வாகிங்கள, நெருங்கவே விடலையாம்,''

''மினிஸ்டர், சுவாமி தரிசனம் செய்துட்டு இருந்தப்போ, கோவிலுக்கு வெளியே இரு தரப்பிலும் வாக்குவாதம் நடந்திருக்கு. அவர் போனத்துக்கு அப்புறம், 'நம்ம கோரிக்கையை மினிஸ்டர் காதில போடாம பண்ணிட்டாங்க. இப்படியே விட்டா சரிப்படாது. தலைமைக்கு புகார் பண்ணிடலாம்'னு பேசிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.


அப்படி என்ன 'பிஸி'யோ!'


'இதெல்லாம் அரசியல்ல சாதாரணங்க்கா...'' சிரித்தபடியே சொன்ன, மித்ரா, ''அவிநாசி கோவில்ல ஆய்வு எப்டி போச்சுங்க்கா...?'' என, கேட்டாள்.

''பூண்டியில கட்சிக்காரங்கன்னா, இங்க கோவில் ஆபீசரு...'' என்ற சித்ரா, ''அவிநாசி பெரிய கோவிலுக்கு அமைச்சர் ஆய்வுக்கு வர்றதுக்கு, 30 நிமிஷம் முன்னமே, கலெக்டர் கோவிலுக்கு வந்து, சுத்தி பார்த்துட்டு இருந்தாரு. அப்போ, மொபைல் போனில் பேசிக்கிட்டே வந்த கோவில் அதிகாரி, கலெக்டர் கையில எலுச்சை பழத்தை கொடுத்து, திரும்பவும் ஓராம நின்னு, போன் பேச ஆரம்பிச்சிட்டாரு...''

''பேசி முடிச்சதுக்கு அப்புறம், திரும்பவும் வந்து கலெக்டருக்கு வணக்கம் சொல்லி, அவர்கிட்ட பேசினாரு. அப்பவும், தன்னோட 'பேன்ட் பாக்கெட்'டில் கையை விட்டபடி, ரொம்ப அசால்ட்டா தான், கலெக்டர்கிட்ட பேசினாரு. இதை கவனிச்சிட்டு இருந்த சிலரு, 'தன்னை 'பெரிய மருது பாண்டியன்'னு நெனச்சிட்டு இப்படி பண்றாரோ...' என கமென்ட் அடிச்சிட்டாங்க...'' என விளக்கினாள்.


'சரக்கு' விற்பனை துாள்'


'அவிநாசியில இருக்கற, 'டாஸ்மாக்' கடை பார்ல, சில்லறை விற்பனை கனஜோரா நடந்துட்டு இருந்தது. அதனால, பெரிய ஆபீசர்ல இருந்து, குட்டி ஆபீசர் வரை கல்லா கட்டிட்டு இருந்தாங்க. இப்ப புதுசா வந்திருக்க ஒரு லேடி ஆபீசர், 'சில்லிங்' விற்ற கடைக்காரங்க மேல 'கேஸ்' போட்டு, கம்பி எண்ண வச்சிட்டாரு. இதனால், மாமூல் மழையில நனைஞ்ச போலீஸ்காரங்க 'அப்செட்' ஆகிட்டாங்க...'' என்றாள் சித்ரா.

''அக்கா, பரவாயில்லையே... இந்த மாதிரி ஆபீசர்ங்க எல்லாம் இருக்காங்களா என்ன'' என, ஆச்சரியப்பட்டாள் மித்ரா, ''பல்லடம் பக்கத்தில நொச்சிப்பாளையத்தில், தினமும் காலையில காய்கறி, பால் கடைங்க திறக்கறதுக்கு முன்னாடியே, மதுக்கடைகளை திறந்திடுறாங்களாம். கடையில ஓபனாவே, 'சரக்கு' விக்கறாங்கன்னு, பொதுமக்கள் தரப்புல இருந்து, புகார் மனு அனுப்பிட்டாங்க...''

''உடனே, 'விசிட்' வந்துட்டு போன அதிகாரிங்க, எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். இப்போ எல்லாம், டீக்கடை மாதிரி, காலையில ஆறு மணிக்கு முன்னாடியே, விற்பனை பட்டைய கிளப்புதாம்,'' என்றாள்.

''அப்ப, கோழி கூவுறதுக்கு முன்னாடியே, 'குடி'மகன்கள் கூவுறாங்க'னு சொல்லு,'' சிரித்த சித்ரா, ''டாஸ்மாக் மேட்டர் நானும் ஒன்னு சொல்றேன். திருப்பூர் சிட்டிக்குள்ள, மதுவிலக்குல இருந்த ஸ்டேஷன் ஆபீசரை, சமீபத்துல 'டிரான்ஸ்பர்' பண்ணாங்க. அந்த இடத்துக்கு வர்றதுக்கு, சில ஆபீசர்ங்க பல பேரு கடுமையா முயற்சி பண்றாங்களாம்,'' என்றாள்.


கூடைக்குள் வாசம்...''இருக்காதா பின்ன, வசூல் மழை பொழியுங்கறதால, போட்டி இருக்கத்தானே செய்யுங்க்கா. இங்க பாருங்க., திருப்பூர்ல, கொடி காத்த குமரன் சிலைக்கு பக்கத்தில, வட மாநிலத்தை சேர்ந்த சிலர், பழக்கடை வச்சி விக்கறாங்க. அதுக்குள்ள, 'சரக்கு' வச்சி, 'டோர் டெலிவரி' பண்றாங்களாம்,''

''குட்கா, பான் மசாலா விற்க, கெடுபிடி அதிகமாகிட்டதால, இப்ப சரக்கு விக்க வந்திட்டாங்க போல...''

''இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட சிட்டி ஆபீசர், 'சிட்டியில குட்கா புடிச்சா, வெறும் கண்துடைப்புக்கு நடவடிக்கை இருக்கக்கூடாது; சம்மந்தப்பட்ட எல்லோரையும் புடிக்கோணும். இல்லாட்டி, தனி 'டீம்' போட்டு, பிடிச்சிட்டா, சம்மந்தப்பட்ட போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுப்பேன்னு,' மைக்லேயே சொல்லி, வெளுத்து வாங்கியிருக்காங்க.இதனால, 'மாமூல்' போலீஸ்காரங்க வெலவெலத்து போயிருக்காங்க. இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் இருக்கற, 'கருப்பு ஆடு'ங்க, ரெய்டு வர்ற விஷயத்தை குட்கா வியாபாரிங்ககிட்ட கசிய விட்டுறாங்களாம்'' என்றாள் சித்ரா.


விழுப்புரம் வரைக்கும்...


''நம்ம சிட்டி போலீஸ் 'புகழ்' விழுப்புரம் மாவட்டம் வரை பரவியிருக்குன்னா பரவாயில்ல'' என புதிர் போட்டாள் மித்ரா.

''அப்படி என்னடி நடந்துச்சு?''

''சமீபத்துல, விழுப்புரத்தில போதை தடுப்பு கடத்தல் பிரிவு போலீஸ்காரங்க, கஞ்சா வைச்சிருந்த சில வட மாநில வாலிபர்களை, கையும் களவுமா பிடிச்சாங்க. உடனே, அவங்க, 'திருப்பூர் போலீஸ்காரங்க மாதிரி, கஞ்சா பொட்டலத்தை வாங்கிட்டு, எங்களை விட்டுடுங்க சார்'னு கெஞ்சியிருக்காங்க. அவங்க அப்படி சொன்னதை வைச்சு தான், நம்ம சிட்டி லிமிட்ல, பறிமுதல் செஞ்ச கஞ்சாவுக்கு வழக்கு போடாத எஸ்.ஐ., ஒருத்தரை கமிஷனர் 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க.

''இந்த விவகாரத்துல, ஒரு போலீஸ்காரரும் சம்மந்தப்பட்டு இருக்காராம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, வாகன தணிக்கை செஞ்சப்போ தான், அஞ்சு கிலோ கஞ்சாவை பறிமுதல் செஞ்சு, கிராம் அளவுல கணக்கு காண்பிச்சிருக்காங்க. கணக்குல காட்டாத கஞ்சாவை, நல்ல விலைக்கு வித்து, பணத்தை பங்கு போட்டுக்கிட்டாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு,''

''பாண்டி'யோட ஆட்டத்துக்கு 'செக்' வைச்ச பெரிய ஆபீசர், 'திரு' விளையாடலை கண்டுக்காம விட்டுட்டாங்கன்னு, பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


கருப்பு ஆடுகள்''இதே மாதிரிதான்க்கா, 'குட்கா' வழக்குல சம்மந்தப்பட்ட ஒருத்தர, தப்ப விட்டுட்டு, குட்காவை மட்டும் பறிமுதல் பண்ணியிருக்காங்க. ரெய்டு வர்ற விஷயத்தை, முன்கூட்டியே கசிய விட்டுருக்காங்க. அந்த குட்கா வியாபாரி, முன் ஜாமீன் வாங்கற வரைக்கும், போலீஸ்காரங்க 'கம்'முன்னு இருந்துட்டாங்க...''

''இந்த 'கோல்மால்' வேலையை தெரிஞ்சுகிட்ட கமிஷனர், ஸ்டேஷன் அதிகாரியை 'சஸ்பெண்ட்' செஞ்சுட்டாங்க. ரெய்டு வர்ற விஷயத்தை கசிய விட்ட 'கருப்பு ஆடு' யாருன்னு, வலை போட்டு தேடிகிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''தெற்கு பார்த்து இருக்க ஒரு ஸ்டேஷன் ஆபீசர், வாகன சோதனையின் போது, காய்கறி லோடு ஏத்திட்டு வந்த, ரெண்டு வண்டிகள்ல, கர்நாடக மதுபாட்டில், 80 பாட்டில் இருந்திருக்கு, அந்த ஆபீசர், ரெண்டு வண்டிகள், மதுபாட்டில், வாகன ஓட்டிகள்கிட்ட இருந்த பணம் எல்லாத்தையும், ஸ்டேஷன்ல ஒப்படைச்சு, வழக்குப்போட சொல்லியிருக்காரு.

''ஆனா, வழக்குப்பதிவு பண்ண போலீஸ்காரங்க, வண்டியை எப்.ஐ.ஆர்.,ல் காண்பிக்காம இருக்க, 'டீல்' பேசி, கணிசமான தொகையை கறந்துட்டாங்க. ஆனாலும், ஒரு வண்டியை, குற்றப்பத்திரிகைல சேர்த்திருக்காங்க. 'ஷாக்'கான, அந்த வண்டி ஓனர், நேரா கமிஷனர்கிட்ட போய், பணத்தையும் வாங்கிட்டு, வண்டி மேல வழக்கும் போட்டுட்டாங்கன்னு, புகார் கொடுத்திருக்காரு.


இழு... இழுவை


''செல்வம்' சேர்க்கறதுல குறியாக இருக்க ஒரு ஏட்டு தான், பணத்தை ஆட்டைய போட்டுட்டாருன்னு தெரியவர அவர்கிட்ட என்கொயரி பண்ணியிருக்காங்க. அந்த பணத்தை ஸ்டேஷனுக்கு தான் செலவு பண்ணேன்னு சொல்லிட்டு, மெடிக்கல் லீவு போட்டுட்டு போயிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''ஏதாவது, பிரச்னை வந்துட்டா, உடனே 'லீவு' போடறது தொடர் கதையாகிட்டே வருது போல...'' என்ற மித்ரா, ''அக்கா... ஒன்றரை வருஷமா, கனெக் ஷன் குடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம்...'' என புதிர் போட்டாள்.

''அட... எந்த டிபார்ட்மென்ட்டுன்னு சொல்லுடி''

''ஓ... அத மறந்துட்டேன். மின்சாரி வாரியம் தான். பூண்டிக்கு பக்கத்துல, ஒருத்தர் புது வீட்டுக்கு லைன் கேட்டு அப்ளிகேஷன் போட்டார். பக்கத்தில ஒருத்தர் அப்ஜெக் ஷன் சொல்றாருன்னு, ஒன்றரை வருஷமா லைன் குடுக்கல. அவரும் நடையாய் நடந்து, இப்ப, கோர்ட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டார்,''

''அப்படின்னா, அதில ஏதாவது உள் குத்து இருக்கணும். நல்லா விசாரிச்சா உண்மை வெளிய வரும்,'' அட்வைஸ் செய்த சித்ரா, ''ஓ.கே., மித்து, கெளம்பலாம்டி. மழை வர்ற மாதிரி இருக்குது,'' என்றபடியே எழுந்தாள். ''ஓ.கே.,'' என்றவாறு மித்ராவும் புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X