தமிழகத்தில் மேல்சபை துவங்குவது அவசியமா?

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தமிழகத்தில் 1921ம் ஆண்டு முதல் மேல்சபை செயல்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை மேல் சபையில் 465 பேர் உறுப்பினர்களாக, அதாவது எம்.எல்.சி.,க்களாக இருந்தனர். 1965ம் ஆண்டில் சட்டசபை தொகுதி வரையறைக்குப் பின், மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 78 ஆக குறைக்கப்பட்டது. இப்படி, ௬௫ ஆண்டுகளாக செயல்பட்ட இந்தச் சபையை, ௧௯௮௬ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கலைத்தார். அதாவது, நடிகை வெண்ணிற ஆடை

தமிழகத்தில் 1921ம் ஆண்டு முதல் மேல்சபை செயல்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை மேல் சபையில் 465 பேர் உறுப்பினர்களாக, அதாவது எம்.எல்.சி.,க்களாக இருந்தனர். 1965ம் ஆண்டில் சட்டசபை தொகுதி வரையறைக்குப் பின், மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 78 ஆக குறைக்கப்பட்டது.

இப்படி, ௬௫ ஆண்டுகளாக செயல்பட்ட இந்தச் சபையை, ௧௯௮௬ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கலைத்தார். அதாவது, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை, மேல்சபைக்கு நியமிக்க எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆனால், நிர்மலா திவாலானவர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நிர்மலாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும், நிர்மலா தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். சர்ச்சை கிளம்பியதால், எம்.எல்.சி., ஆக அவர் முன்வரவில்லை. இந்த சர்ச்சையால் எரிச்சல் அடைந்த எம்.ஜி.ஆர்., மேல்சபையை கலைக்க முடிவு செய்தார்.மற்றொரு புறம், அரசியல் எதிரியான கருணாநிதியை பழிவாங்கும் வகையிலும் இதைச் செய்தார்.

மேல்சபையை கலைப்பதற்கான தீர்மானம், ௧௯௮௬ மே ௧௪ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, பார்லிமென்டின் இரு சபைகளின் ஒப்புதலுடன் நிறைவேறியது. மேல்சபை கலைக்கப்பட்டது. அப்போது, மேல்சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆரின் செயலால் வெறுப்புக்கு ஆளான கருணாநிதி, அவரது மறைவுக்கு பின், ௧௯௮௯ல் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மேல்சபையை உருவாக்க திட்டமிட்டார். இதற்கான தீர்மானம், அதே ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு ஒப்புதலுக்கு சென்றது. ஆனாலும், ராஜ்யசபாவில் நிறைவேறிய தீர்மானம் லோக்சபாவில் நிறைவேறவில்லை; ௧௯௯௧ல் தி.மு.க., அரசு கலைக்கப்பட்டதால், கருணாநிதியின் முயற்சி வெற்றி பெறவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மேல்சபைக்கான தீர்மானத்தை ரத்து செய்தார். மறுபடியும், ௧௯௯௬ல் தி.மு.க., வெற்றி பெற்ற பின், இதற்கான முயற்சி எடுக்கப்பட்டும், அது தோல்வியில் முடிவடைந்தது. இதன்பின், ௨௦௦௬ல் கருணாநிதி ஆட்சி அமைந்ததும், ௨௦௧௦ல் மீண்டும் மேல்சபைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது, அந்தத் தீர்மானம் சட்டமாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதற்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆதரவே காரணம். அப்போது, மேல்சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கினாலும், ௨௦௧௧ல் ஆட்சிக்கு வந்த ஜெ., அரசால் அந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. மேல்சபையை ரத்து செய்வதற்கான தீர்மானம், ஜெ., அரசால் நிறைவேற்றப்பட்டது. மூன்று முறை கருணாநிதி முயற்சித்தும், மேல்சபையை கொண்டு வர முடியாமல் போன நிலையில், அதை மீண்டும் கொண்டு வந்து, தன் தந்தையின் கனவை நனவாக்கப் போகிறார் முதல்வர் ஸ்டாலின் என, தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது நாட்டிலுள்ள மொத்த மாநிலங்களில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீஹார், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களில் மட்டுமே, மேல்சபைகள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில், மீண்டும் மேல்சபை தேவையா என்ற கேள்வி எழுகிறது. எம்.ஜி.ஆரால் ரத்து செய்யப்பட்டதை, மீண்டும் கொண்டு வர கருணாநிதி மூன்று முறை முயற்சித்தும், அது பலனளிக்காமல் போன நிலையில், தற்போது அது அவசியமா என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கேட்கின்றனர்.'இன்றைய அரசியலானது சேவை மனப்பான்மையுடன் கூடியதாக இல்லை. பதவிக்கு வந்தால் எந்த வகையில் ஆதாயம் பெறலாம் என்பதை நோக்கியே உள்ளது. பதவிக்காக பலர், பல கோடிகளை செலவழிக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது.

மேலும், மாநிலம் தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடியில், மேல்சபை அவசியமா' என்றும் பலரும் நினைக்கின்றனர். சட்டசபையில் மொத்தமுள்ள ௨௩௪ எம்.எல்.ஏ.,க்கள், மாநிலத்தில் உள்ள ௩௯ லோக்சபா எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களால் தீர்க்க முடியாத பிரச்னைகளை, மேல்சபை உறுப்பினர்கள் தீர்த்து விடுவரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. மேலும், மேல்சபைக்கு சட்டசபைக்கு உள்ள அதிகாரமும் இருக்காது. ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி கிடைக்காதவர்கள், இதில் இடம் பெற நேரிடலாம். அத்துடன், அரசுக்கு ஆதரவாக துதிபாடுவோர் நிறைந்த சபையாக மாறவும் வாய்ப்பு உண்டு.

செல்வாக்கு படைத்தவர்கள் பதவி பெறவும், ஆளும் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கவும், அவர்கள் ஆதாயம் பெறவுமே இந்த சபை உதவும். அதற்கு பதிலாக, தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், நிபுணர் குழு அமைத்து, அவர்களின் பரிந்துரையை பெற்று தீர்வு காண்பது போன்ற நடைமுறையை தொடரலாம்.இதனால், செலவும் குறையும். எனவே, மேல் சபை விஷயத்தில், அரசு மாற்றி யோசித்தால் நல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X