சென்னை:ஆவின் நிறுவனத்திற்கு 10.3௭ கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலைய, 'டிராலி'களில் 33.4௦ லட்சம் ரூபாய்க்கு ஆவின் நிறுவன விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆவின், 'ஹைடெக் பார்லர்'களில் 29.3௦ லட்சம் ரூபாய்க்கு பெயர் பலகைகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. ஜி.எஸ்.டி., இல்லாத நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கள்ளழகர் கோவிலில் 1.95 லட்சம் ரூபாய்க்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 1.95 லட்சம் ரூபாய்க்கும், எல்.இ.டி., விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. ரேடியோ விளம்பரம் செய்வதற்கு 2.22 கோடி ரூபாய், இரண்டு மாத இதழ்களுக்கு 3.77 லட்சம் ரூபாய் விளம்பரம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு விளம்பரங்களுக்கு மட்டும், 3.04 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் ஆவின் நிறுவனத்திற்கு 10.37 கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது, தணிக்கையில் தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் நிகர விற்பனையில், 10ல் ஒரு பங்கு மட்டுமே, இதுபோன்ற பணிகளுக்கு செலவிட வேண்டும். இப்பணிகளை மேற்கொண்ட போது, திறந்தவெளி ஒப்பந்தபுள்ளி சட்டத்தையும் பின்பற்றவில்லை.
இந்த நிதியிழப்புக்கு, சென்னை ஆவின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் காரணமாக இருந்துள்ளனர். இது தொடர்பான, உயர் அதிகாரிகள் விசாரணையில், 78 'பைல்'கள் வாயிலாக, 4.44 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5.93 கோடி ரூபாய்க்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
பால் கூட்டுறவு தணிக்கைத் துறை, மண்டல துணை இயக்குனர், தணிக்கையாளர், துணை பதிவாளர் ஆகியோர், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். இவர்கள் மீது குற்றவியல், தண்ட வசூல், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE