திருப்புல்லாணி : தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 2017 முதல் 2020 வரை கட்டப்பட்ட பெரும்பாலான தடுப்பணைகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பொதுவாக தடுப்பணைகளை சுற்றி, வெள்ள நீர் வெளியே செல்லாமல் கரை பகுதிகளை அமைப்பது வழக்கம். ஆனால் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மை தடுப்பணைகளில் கரை ஏதுமின்றி கட்டாந்தரையாகவே உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:ரூ. 7.50 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை செலவு செய்து தடுப்பணைகள் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கி வைக்கவும், கடலுக்கு வீணாக செல்லும் நீரினை பாதுகாத்து வைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகள் விரிசல் ஏற்பட்டும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அரசு நிதி பெருமளவு வீணடிக்கப்பட்டுள்ளது.எனவே திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்டபகுதிகளில் கட்டப்பட்டுள்ள சேதமடைந்த தடுப்பணைகளை செப்பனிட்டும், வரும் காலங்களில் வெள்ள நீரால் தரமற்ற தடுப்பணைகளின் கட்டுமானம் அடித்துசெல்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE