சென்னை: "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைத்திருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர், பொய் வழக்கு போடுகின்றனர்," என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் அதிமுக.,வினர் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி, தேனி மாவட்டம் போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சேலம் சூரமங்கலததில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், திண்டிவனத்தில் சி.வி.சண்முகம், கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சென்னை கே.கே.நகரில் வளர்மதி ஆகியோர் தலைமையில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
கண்துடைப்பு
போராட்டத்தின்போது முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பேசியதாவது: திமுக சார்பில் 505 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளனர். அதில், முக்கியமான சில விஷயங்களை கூட திமுக நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. ஸ்டாலின் முதல்வர் ஆனதும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார். தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளனர்.

அதேபோல், கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவான வங்கி நகைக்கடனை தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், இதுவரை அது சம்பந்தமாக அறிவிப்பு வரவில்லை. இது சம்பந்தமாக மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைத்திருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர், பொய் வழக்கு போடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE