பெங்களூரு ; கர்நாடகாவின் 24வது முதல்வராக எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரும், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை (61) பதவி ஏற்று கொண்டார்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, 78, தலைமையிலான பா.ஜ., அரசு நடந்து வந்தது. வயது மூப்பு மற்றும் உட்கட்சி பூசலால், நேற்று முன்தினம் (ஜூலை 26) அவர் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. புதிய முதல்வரை தேர்வு செய்ய, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோரை, பா.ஜ., மேலிடம் மேற்பார்வையாளராக நியமித்தது.
பெங்களூரு வந்த அவர்கள், மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் ஆலோசித்த பின், காபந்து முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினர்.'கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தாருங்கள்; எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு வாருங்கள்' என்று எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடனான விரிவான ஆலோசனையில், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகியோரின் பெயர் முதல்வர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டன. இதில், பசவராஜ் பொம்மைக்கு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் எடியூரப்பாவின் ஆதரவு இருந்ததால், அவரையே தேர்வு செய்வதாக முடிவானது.
இதையடுத்து நேற்றிரவு 7:30 மணிக்கு, பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூடியது; எடியூரப்பாவும் பங்கேற்றார். அங்கு பா.ஜ., சட்டசபை குழு தலைவராக பசவராஜ் பொம்மை பெயரை, எடியூரப்பா முன்மொழிந்தார்; கோவிந்த் கார்ஜோள் வழிமொழிந்தார். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். முதல்வராக தேர்வானதும், அனைவரையும் கை கூப்பி வணங்கிய பொம்மை, எடியூரப்பா காலில் விழுந்து வணங்கினார்.

இன்று பகல் 11:00 மணிக்கு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்று கொண்டதும், பசவராஜ் பொம்மைக்கு கவர்னர், எடியூரப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தந்தையும் முதல்வராக இருந்தார்
பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988 ஆக., 13 முதல் 1989 ஏப்., 21 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தவர். இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், தேவகவுடா பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சி காலத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தவர். தற்போது, அவரது மகன் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

பயோ டேட்டா
பெயர்: பசவராஜ் பொம்மை, 61
தொகுதி: சிக்காவ், ஹாவேரி
சமுதாயம்: வீரசைவ லிங்காயத்
கல்வி: பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
குடும்பம்: மனைவி, மகன், மகள்
தொழில்: விவசாயம்
அரசியல் அனுபவம்: 1998, 2004 என இரண்டு முறை, தார்வாட் உள்ளாட்சி வாயிலாக, ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.சி.,யாக பதவி வகித்தார். எடியூரப்பா அழைப்பின்படி, பா.ஜ.,வில் இணைந்தார். 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று, எடியூரப்பா அரசில் நீர்ப்பாசன துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த, 2013ல் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். மீண்டும் எடியூரப்பா ஆட்சியில், 2019 செப்., 27 லிருந்து, 2020 பிப்., 6 வரை கூட்டுறவு துறை அமைச்சராகவும், நேற்று முன்தினம் வரை, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். முன்னாள் முதல்வர் ஜே.எச்.பாட்டீலுக்கு அரசியல் செயலராக இருந்தவர்.