புதுடில்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை தற்காலிக இடத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நேயாளிகள் பிரிவை துவங்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், ‛மதுரை எய்ம்ஸ் நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை துவங்கும். இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை துவங்க மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம். அதன்படி தமிழக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்,' என பதில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE